மதுரை சித்திரை திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்!

Meenakshi
Apr 22, 2024,06:41 PM IST

மதுரை: மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று திருவிழாவின் 11ம் நாள் நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து வந்த நிகழ்வு வெகுவிமர்சையாக இன்று நடந்தது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


கோயில்களின் நகரமான மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.  மொத்தம் 12 நாட்கள் இத்திருவிழா நடைபெறும். கடந்த ஏப்ரல் 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது இவ்விழா. விழா தொடங்கிய நாள் முதல் தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வருவர். இந்நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்வர்.




இதனைத் தொடந்து விழாவின் 8ம் நாள் நிகழ்வாக மீனாட்சி அம்மன் பட்டா பிஷேகமும், 9ம் நாள் நிகழ்வாக திக்கு விஜயமும் சிறப்பாக நடந்தேறியது. இவ்விழாவின் 10ம் நாள் முக்கிய  நிகழ்வான ஸ்ரீ மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருமணம் நேற்று நடைபெற்றது. மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவினை காண ஏராளமான பக்தர்கள் மதுரை மாநகரில் திரண்டனர்.  நேற்று மீனாட்சி அம்மனக்கு மங்கலநாண் அணிவிக்கப்பட்டதும் அங்குள்ள கூடியிருந்து சுமங்கலிப்பெண்கள் தங்களது தாலியையும் புதுப்பித்துக் கொண்டனர். அதன் பின்னர் திருக்கல்யாண பிரமாண்ட விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.


இதனைத் தொடர்ந்து சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம்  இன்று வெகு விமரிமையாக நடைபெற்றது. இவ்விழாவிற்காக பழமையான பிரம்மாண்ட தேர் அலங்கரிக்கப்பட்டு அதில், அதிகாலையில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை-சுந்தரேசுவரர் ஆகியோர் ஒரே பல்லக்கில் கீழமாசி வீதியில் உள்ள தேர் நிற்கும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பிரியாவிடை -சுந்தரேசுவரர் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தளினர்.


தொடர்ந்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து  இழுத்தனர்.  முதலில் பெரிய தேரும், அதைத் தொடர்ந்து சிறிய தேரும் இழுத்து வரப்பட்டது. 4 மாசி வீதிகளிலும் தேர்கள் இழுத்து வரப்பட்டன. பகல் 11 மணியளவில் தேர்கள் இரண்டும் நிலையான இடம் வந்தடைந்தன. இன்று மாலை வரை தேர்கள் அந்த இடத்திலேயே  பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்படும்.


இந்த விழாவினைக் காண ஏராளமான பக்தர்கள் வருவதனால் ஏராளமான போலீசார் பாதுக்காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டர். பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. தேரோட்டத் திருவிழாவுடன் மீனாட்சி அம்மன் விழா நிறைவடைகிறது. 


கள்ளழகர் வருகை


இந்த நிலையில் அடுத்து கள்ளழகருக்கான விழா களை கட்டுகிறது. அழகர் மலையிலிருந்து கிளம்பியுள்ள கள்ளழகர் இன்று மாலை தல்லாகுளம் வந்து சேருகிறார். அவருக்கு அங்கு எதிர்சேவை நடக்கிறது. ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் கோலாகலமான நிகழ்வு இது. தற்போது ஒவ்வொரு மண்டகப் படியாக வந்து கொண்டிருக்கிறார் அழகர்.


எதிர்சேவை நிகழ்ச்சியைத் தொடர்ந்து நாளை காலை தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் முக்கிய வைபவம் நடைபெறும். அப்போது எந்தப் பட்டு உடுத்தி வருகிறாரோ அதற்கேற்ப அந்த ஆண்டின் சுபிட்சம் இருக்கும் என்பது ஐதீகம். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் மதுரை வைகை ஆற்றுப் பகுதியிலும் சுற்று வட்டாரங்களிலும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.