மாணவர்களிடையே மொழிப் பற்றை அதிகரிக்க.. சென்னையில் தூய தமிழ் மாணவர்கள் மாநாடு

Manjula Devi
Jan 23, 2025,10:23 AM IST

சென்னை: மாணவர்களிடையே மொழிப் பற்றை உருவாக்கும் நோக்கில், தமிழியக்கம் செந்தமிழ் திருத்தேர் தூய தமிழ் மாணவர் இயக்கம்,  பன்னாட்டு தூய தமிழ் மாணவர் மாநாடு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை 25ஆம் தேதி நடைபெறுகிறது.

தற்போதைய காலகட்டத்தில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தமிழின் மீது ஆர்வம் குறைந்து ஆங்கிலம் சார்ந்த கல்வியை நாடி செல்கின்றனர். இதனால் தமிழ் மீதுள்ள பற்றும், அதை கற்க வேண்டும் என்கின்ற ஆர்வமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி விட்டது. தமிழில் எழுதப் படிக்கத் தெரியாத தமிழ்க் குழந்தைகள் அதிகரித்து வருகின்றனர். குறிப்பாக ஆங்கில வழியில் கல்வி கற்றால் மட்டுமே பெருமை என மாணவர்களும் கருதுகின்றனர்.



தமிழின் மீது கற்றல் திறன் குறைந்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் தமிழ் மொழியில் பிறமொழிச் சொற்களை கலந்து பேசுவதையும் எழுதுவதையும் வழக்கமாகக் கொண்டு வருகின்றனர். இதனால் இன்றைய மக்களிடம் தூய தமிழ் பேசுவது என்பது அரிதாகி விட்டது. அதிலும்  மாணவர்களிடம் தூய தமிழ் என்ற ஒன்று கேலிப் பொருளாகிவிட்டது. அதாவது தூய தமிழில் பேசினால் பலரும் எள்ளி நகையாடுகின்றனர். இதனால் இன்றைய மாணவர்களிடம் தமிழின் முக்கியத்துவமும் அதன் மகத்துவமும் தெரியாமல் மறைந்தும் அழிந்தும் வருகிறது. 

இதனை மீட்டெடுக்க இன்றைய மாணவர் சமுதாயத்திடம் மொழிப்பற்றை அதிகரிக்கவும், தூய தமிழ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பன்னாட்டு தூய தமிழ் மாணவர் மாநாடு என்ற நிகழ்ச்சியை தமிழியக்கம் செந்தமிழ் திருத்தேர் தூய தமிழ் மாணவர் இயக்கம் நடத்த உள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை 25ஆம் தேதி சென்னை வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் அமைந்துள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. 

இதில் விஐபி வேந்தரும் தமிழ் இயக்கத்தின் தலைவருமான கோ. விஸ்வநாதன் தலைமை வகித்து சிறப்புரையாற்ற இருக்கிறார். மேலும் செந்தமிழ் திருத்தேர் அமைப்பின் மாநில செயலாளர் நேரு, அமைப்பின் தலைவர் திவாகர், பா அருளியார், தங்க. காமராசு, அப்துல் காதர், ஆவணப்பட இயக்குனர் சுந்தர்ராஜன் மற்றும் தமிழ் அமைப்பின் நிர்வாகிகள், எழுத்தாளர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதும் 3000 மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில், ஆயிரம் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பங்கேற்கும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் மற்றும் தூய தமிழ் கையேடு வழங்கப்படும். அங்கு மாணவர்களுக்கான மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவேற்கப்பட வேண்டிய, பாராட்டப்பட வேண்டிய, சரியான நேரத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள மாநாடு இது என்பதில் சந்தேகம் இல்லை.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்