அதாங்க முக்கியம்..  37 வருட திரைப்பயணத்தில் நான் கற்றுக்கொண்டது.. எம்.எஸ்.பாஸ்கர்!

Meenakshi
Nov 30, 2023,11:57 AM IST

சென்னை: ஒவ்வொரு படமும் நம் முதல் படம் என்ற எண்ணத்தோடு நாம் பணியாற்ற வேண்டும். இது என் 37 வருட திரைப்பயணத்தில் பல சாதனையாளர்களையும் , முன்னோர்களையும் பார்த்தும், அவர்களைப்பற்றி பலரிடம் கேட்டும் நான் தெரிந்து கொண்டது என்று பிரபல நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தெரிவித்துள்ளார்.


ஒரு அட்டகாசமான படம் வெளியாகியுள்ளது.. பெயர் பார்க்கிங்.


தன் மனைவிக்காக ஹீரோ  ஹரிஷ் கல்யாண் புது கார் ஓன்றை வாங்குகிறார். அதனை வீட்டில் நிறுத்தும் போது அவருக்கும் பக்கத்து வீட்டுக்காரர் எம்.எஸ் பாஸ்கருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இந்த சின்ன பிரச்சனையினை எவ்வாறு பெரிதாகி என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை பற்றியது தான் பார்க்கிங் திரைப்படம். 




இத்திரைப்படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் திரைப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி நம்மிடையே பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், 


பார்க்கிங் ஓர் அருமையான படைப்பு! ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு! மிகச்சிறந்த இயக்கம்! தொய்வில்லாத கதையோட்டம்!  தெளிவான வசனங்கள் இடையிடையே இயல்பான எல்லை மீறாத ஆபாசம் துளியுமற்ற நகைச்சுவை அனைத்தும் அற்புதம். எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியும் ஆத்ம திருப்தியும் கிடைத்தது என்பது நூறு சதம் சத்தியம்.


இப்படத்தை படமாக்கும் போது நம்மிடையே எத்தனையோ விவாதங்கள் நடந்திருக்கலாம். அது கதை மீதும் எனக்களித்த வேடத்தின் மீதும் நம் அனைவரது உடல் நலத்தின் மீதும் உள்ள அக்கறையினால் மட்டும்தான் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக ஒரு விநாடி கூட என்னை தவறாக எண்ணக்கூடாது. 


ஒருவேளை அறிந்தோ அறியாமலோ பணியின் போது என்னால் யார் மனமாவது எள் முனையளவு வேதனைப்பட்டிருப்பினும் அதற்காக நான் இதயபூர்வமாக இருகரம் கூப்பி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.


எனது வேண்டுகோள் என்னவென்றால்... அடுத்தடுத்த படங்கள் செய்யும் போதும் இதே பணிவையும், பண்பையும் நாம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே. ஒவ்வொரு படமும் நம் முதல் படம் என்ற எண்ணத்தோடே நாம் பணியாற்ற வேண்டும். இது என் 37 வருட திரைப்பயணத்தில் பல சாதனையாளர்களையும் , முன்னோர்களையும் பார்த்தும், அவர்களைப்பற்றி பலரிடம் கேட்டும் தெரிந்து கொண்டது.துணிவே துணை! பணிவே பலம்!.


கவியரசர் கூறிய, நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும். என்ற வைர வரிகள் நம் மனங்களை விட்டு ஒரு கணமும் நீங்கலாகாது! எனக்கு இந்த பொன்னான வாய்ப்பை அளித்த தயாரிப்பாளர்கள் சுதன், சினீஷ், இயக்குனர் ராம்குமார், நாயகன் ஹரீஷ், நாயகி இந்துஜா உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வணங்குகிறேன் என்று கூறினார் எம்.எஸ். பாஸ்கர்