மார்கழி 8 திருவெம்பாவை பாசுரம் 8.. கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்

Swarnalakshmi
Dec 22, 2024,04:45 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருவெம்பாவை பாசுரம் 8:


கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்

ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்

கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை

கேழில் விழுப்போருள்கள் பாடினோம் கேட்டிலையோ?

வாழி! ஈதென்ன உறக்கமோ? வாய் திறவாய்!

ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?

ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை

ஏழை பங்காளானையே பாடேலோர் எம்பாவாய்!




பொருள் :


கோழிகள் கூவி விட்டது. பறவைகள் கீச்சிட்டு எழுந்து, கூட்டை விட்டு புறப்பட்டு விட்டன. எங்கும் பார்த்தாலும் காலை பொழுதின் அழகு நிரம்பி உள்ளது. திரும்பி திசை எங்கும் வெண் சங்கு இசைக்கும் சத்தம் கேட்க துவங்கி விட்டது. ஜோதி வடிவமாக காட்சி தந்த பரம்பொருளாகிய சிவ பெருமானின் பெரும் கருணையை எண்ணிய வியந்து பாடிக் கொண்டிருக்கிறோம். இவைகள் அனைத்தும் உன்னுடைய காதுகளில் விழவில்லையா? வாழ்க உன்னுடைய உறக்கம். இதென்ன இப்படி தூங்குகிறாய்? உன்னுடைய திறந்து பதில் சொல். பாழ்கடலில் பள்ளி கொண்டுள்ள திருமாலின் சிவ பக்தி பற்றி தெரியும் தானே? ஆழ்ந்த சயனத்தில் இருக்கும் அவரே சிவ பெருமானின் திருவடியை காண தேடி சென்றாரே.


ஊழியாகிய உலகம் அழியும் சமயத்திலும் அழியாமல் நின்ற ஒரே தலைவனாக இருக்கக் கூடியவனை, ஏழைகளுக்கு தோழனை போல் இருப்பவனை போற்றி பாடிட எங்களுடன் எழுந்து வா பெண்ணே.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்