மார்கழி 5 மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாசுரம் 5.. மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்

Swarnalakshmi
Dec 19, 2024,05:08 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருவெம்பாவை பாசுரம் 5 :


மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்

போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்

பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்

ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்

கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்

சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று

ஓலம் இடினும் உணராய் உணராய்காண்

ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்




பொருள் :


திருமாலும், பிரம்மாவும் காண முடியாத அண்ணாமலையாக திகழும் நம்முடைய தலைவனாகி சிவ பெருமானை பற்றி உனக்கு தான் எல்லாம் தெரியும் என பொய்களை பேசுவாயே. அந்த பால் சுரக்கம், தேன் போல் இனிக்கும் வாயுடைய வஞ்சகமான பெண்ணே, உன்னுடைய கதவை திறந்து முதலில் வெளியே வா. இந்த உலமும் மேல் உலகமும் பிற உலகத்தில் வசிப்பவர்களும் அறிவதற்கு அருமையான, அழகாக இருந்து சிவ பெருமான், நம்முடைய குற்றங்கள் அனைத்தையும் பொறுத்து அருள் செய்யும் சிவ பெருமானின் அரிய குணத்தை போற்றி பாடிட வேண்டும். அவரை போற்றி பாடி, நாங்கள் முறையிட்டுக் கொண்டிருப்பதை அறியாமல் நீ இப்படி தூங்குகிறாயே. அழகிய நீண்ட கூந்தலை உடைய பெண்ணே, இது தானோ உன்னுடைய சிவ பக்தி?



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்