மார்கழி 17 திருவெம்பாவை பாசுரம் 17 - செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 17 திருவெம்பாவை பாசுரம் 17 - செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
திருவெம்பாவை பாசுரம் 17 :
செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்
கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.
பொருள் :
சிவந்த தாமரை போன்ற கண்களை உடைய நாராயணன், நான்கு திசைகளில் முகம் கொண்ட பிரம்மா, தேவர்கள் என எவருக்கும் அளிக்காத இன்பத்தை நமக்கு அள்ளி வழங்க நம் தலைவாகிய சிவ பெருமான் அனைவரின் வீடுகளிலும் எழுந்தருளி உள்ளார். அவரது தாமரை போன்ற திருவடிகளால் நம்மை ஆட்கொள்ள சேவகன் போல் நமக்காக இறங்கி வந்துள்ளான். அழகிய கண்களை உடையவனும், அடியவர்களுக்கு அமுதம் போன்ற இன்பத்தை தரும் நம்முடைய தலைவனான அந்த சிவனை வணங்கி நலன்கள் பலவும் பெறுவதற்காக தாமரை மலர்கள் மிதக்கும் இந்த பொய்கையில் குதித்து நீராடி அவனின் தரிசனத்தை பெறுவதற்காக, தேன் சிந்தும் மலர்களை கருமையான கூந்தலில் சூடிய பெண்களே தயாராகுங்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்