மார்கழி 11 திருவெம்பாவை பாசுரம் 11 .. மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்!
- ஸ்வர்ணலட்சுமி
திருவெம்பாவை பாசுரம் 11 :
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம்
உய்ந்தொழிந்தோம் எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.
பொருள் :
சிவ பெருமானே! உன்னுடைய உண்மையான அடியவர்களாகி நாங்கள், பூக்கள் நிரம்ப மலர்ந்திருக்கும் குளத்தில் குதித்து நீராடி, உன்னுடைய திருவடியை தேடும் பாடல்களை பாடிய படியே நீராடிக் கொண்டிருக்கிறோம். காலம் காலமாக இந்த பாவை நோன்பை நாங்கள் கடைபிடித்து வருவதை நீ அறிவாய். சிவந்த நெருப்பை போன்றவனே, உடல் முழுவதும் திருநீறு பூசியவனே! அனைத்து செல்வங்களுக்கும் தலைவனாக விளங்குபவனே! சிறுத்த இடையையும். மையிட்ட அழகிய மீன் போன்ற கண்களையும் உடைய பார்வதி தேவியின் கணவனே! ஐயனே! நீ இந்த உயிர்களை ஆட்கொண்டதும் அவை என்னவெல்லாம் நன்மைகளை அடையுமோ, அவை அனைத்தையும் அடைந்து விட்ட உணர்வு உன்னை போற்றி பாடும் போதே எங்களுக்கு கிடைத்து விடுகிறது. இந்த பேரின்ப நிலை மறைந்து விடாமல் எப்போதும் நிலைத்திருக்க எங்களுக்கு அருள் செய்ய வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்