விடைபெற்றார் காயத்ரி கிருஷ்ணன்.. வந்தார் புது கலெக்டர் சாருஸ்ரீ.. கல்வியில் கலக்குமா திருவாரூர்?

Su.tha Arivalagan
Feb 05, 2023,01:42 PM IST
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக சாருஸ்ரீ பதவியேற்றுள்ளார். இதுவரை திருவாரூர் கலெக்டராக இருந்து வந்த காயத்ரி கிருஷ்ணன் விடைபெற்றுள்ளார்.

1997ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்தின் 34வது கலெக்டராக காயத்ரி கிருஷ்ணன் பணியாற்றி வந்தார். கலெக்டராக வந்த வேகத்திலேயே மக்களின் அபிமானத்தைப் பெற்றவர் காயத்ரி கிருஷ்ணன். தெளிவான நிர்வாகத்தைக் கொடுத்தவர். சாமானிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முக்கியத்துவம் கொடுத்தவர்.


காயத்ரி கிருஷ்ணன்

இவர் பொள்ளாச்சியில் முன்பு சார் ஆட்சியராகப் பணியாற்றியபோது, மரங்களை அகற்றுவதற்கு புதிய யோசனையை அமல்படுத்தியவர். அதாவது மரங்களை வெட்டி அதை வீணடிக்காமல் அப்படியே வேரோடு பெயர்த்து வேறு இடத்தில் நடும் முறையை அங்கு அமல்படுத்தி பலரது பாராட்டுக்களைப் பெற்றவர். திருவாரூர் கலெக்டராக இருந்தபோதும் சிறப்பாக செயல்பட்டு  மக்களின் அன்பையும், பாராட்டையும் பெற்றார்.

இந்த நிலையில் காயத்ரி கிருஷ்ணன் சமீபத்தில் கலெக்டர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டார். அவருக்குப் பதில் சாருஸ்ரீ புதிய கலெக்டராக அறிவிக்கப்பட்டார்.   இவரும் மக்களின் அன்பைப் பெற்ற சூப்பர் கலெக்டர்தான்.  கோவையை சொந்த ஊராகக் கொண்ட சாருஸ்ரீ கல்வி வளர்ச்சியில் மிகுந்த அக்கறை காட்டுபவர். குறிப்பாக பெண் கல்விக்காக குரல்கொடுப்பவர்.  இவர் 2014ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியானவர். தமிழ்நாட்டிலேயே முதலிடத்தில் தேறி சாதனை படைத்தவர் சாருஸ்ரீ.


சாருஸ்ரீ

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக இருந்தவர் சாருஸ்ரீ. தற்போது திருவாரூர் மாவட்ட ஆட்சியராக பணியேற்றுள்ளார். அவருக்கு திருவாரூர் மக்கள் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். பலர்,  திருவாரூர் மாவட்டத்தில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. அதை சரி செய்வதில் முன்னுரிமை தருமாறு கோரியுள்ளனர். 

திருவாரூர் பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரையிலான சாலை, திருவாரூர் - மயிலாடுதுறை சாலை ஆகியவற்றை சீர்செய்ய வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.