திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை.. கும்பலின் தலைவன் உள்பட 2 பேர் ஹரியானாவில் கைது!

Su.tha Arivalagan
Feb 17, 2023,09:39 PM IST

சென்னை: திருவண்ணாமலையில் துணிகரமாக நடந்த ஏடிஎம் கொள்ளையில்  ஹரியானாவைச் சேர்ந்த 2 கொள்ளையர்கள் அங்கு வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களை விமானம் மூலம் சென்னை கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 4 இடங்களில் ஏடிஎம் மெஷின்களை உடைத்து அதிலிருந்து ரூ. 72.5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த துணிகர திருட்டு தமிழ்நாடு காவல்துறைக்கு விடப்பட்ட சவாலாக பார்க்கப்பட்டது.


வட மாநிலக் கொள்ளையர்களே இதில் சம்பந்தப்பட்டிருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். இதையடுத்து இந்தக் கொள்ளையர்களைப் பிடிக்க பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இவர்கள் நடத்திய தீவிர வேட்டையில் ஹரியானாவைச் சேர்ந்த கொள்ளையர்கள்தான் இதைச் செய்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ஹரியானா விரைந்த தமிழ்நாடு போலீஸார், அங்கு வைத்து இருவரை பிடித்தனர். அவர்களது பெயர்கள் - முகம்மது ஆரிப் மற்றும் ஆசாத் கான். இருவரையும் பிடித்த போலீஸார் அவர்களிடமிருந்து ரூ. 3. லட்சம் பணத்தை பறிமுதல்செய்தனர். அவர்கள் இருவரும் அவர்களது சொந்த கிராமத்தில் பதுங்கியிருந்தபோது அங்கு வைத்து உள்ளூர் போலீஸாரின் உதவியுடன் போலீஸார் கைது செய்தனர். பின்னர்  அவர்களை உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது கஸ்டடியில் தமிழ்நாடு போலீஸார் எடுத்தனர்.


இரு கொள்ளையர்களும் பின்னர் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டனர்.  இந்த இருவரையும் வைத்து கொள்ளையில் ஈடுபட்ட மற்றவர்களையும் போலீஸார் பிடிக்கவுள்ளனர். ஏற்கனவே இதுதொடர்பாக குஜராத்துக்கும், கர்நாடகத்துக்கும் தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.