கூட்டணி கட்சியினருடன் ஊர்வலமாக போய் திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில்.. மனு தாக்கல்

Manjula Devi
Mar 27, 2024,01:21 PM IST

சென்னை:  திருவள்ளூர் தனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் இன்று காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.


லோக்சபா தேர்தலை முன்னிட்டு அனைத்து கூட்டணி கட்சிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில்  காங்கிரஸ் ஒன்பது தொகுதிகள் மற்றும் புதுவையிலும் போட்டியிடுகிறது. இதில் திருவள்ளூர் தனி தொகுதியில் சசிகாந்த் செந்தில் போட்டியிடுகிறார்.




இன்று சசிகாந்த் செந்தில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இதற்காக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினருடன் அவர் ஊர்வலமாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். உற்சாக முழக்கத்துடன் திறந்த வேனில் அழைத்து வரப்பட்ட சசிகாந்த் செந்திலுக்கு வழியெங்கும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 


Watch: சசிகாந்த் செந்தில் வேட்பு மனு தாக்கல்



வேட்பு மனுத் தாக்கலையே ஊர்வலமாக சென்று தடபுடல் படுத்திய திமுக கூட்டணியினர் அப்படியே தங்களது பிரச்சாரத்தையும் தொடங்கினர். திருவள்ளூர் தனி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள சசிகாந்த் செந்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். கர்நாடகத்தில் பணியாற்றி வந்த அவர் பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கர்நாடக சட்டசபைத் தேர்தலில் இவரது தலைமையில் செயல்பட்ட காங்கிரஸ் வார் ரூம் சிறப்பான உத்திகளை வகுத்துக் கொடுத்து, காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய வெற்றி பெற  பேருதவி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.