திருப்பள்ளியெழுச்சி பாடல் 01.. "போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே புலர்ந்தது"
திருப்பள்ளியெழுச்சி பாடல் 01 :
போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே புலர்ந்தது
பூங்கழற்கு இணைதுணை மலர் கொண்டு
ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்நகை
கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடையாய் எவை உடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே
பொருள் :
என்னுடைய வாழ்க்கையின் அடிப்படை பொருளாக விளங்கும் பெருமானே உன்னுடைய திருவடிகளை வணங்கிறேன். பூ போன்ற உன்னுடைய திருவடிகளில் அதற்கு இணையான பூக்களை சாத்தி வழிபட நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். அவற்றை ஏற்றுக் கொண்டு உன்னுடைய திருமுகத்தில் மலர்ந்திருக்கும் சிரிப்பை பார்த்த ஆனந்தத்தில் உன்னுடைய திருவடிகளை விழுந்து வணங்குகிறோம்.
குளம் முழுவதும் நிரம்பிய நீரால் இருக்கும் சேற்றில் மலர்ந்திருக்கும் செந்தாமரை மலர்கள் நிறைந்த அழகிய குளங்களையும், வயல்களால் சூழப்பட்ட திருப்பெருந்துறை தலத்தில் குடிகொண்டிருக்கும் சிவ பெருமானே, உயர்த்திக் கட்டப்பட்ட கொடியில் எருது சின்னத்தினை கொண்டவனே, எம்மை ஆட்கொண்ட பெருமானே, தூக்கத்தில் இருந்த எழுந்து கொள்ள வேண்டும்.
விளக்கம் :
திருவெம்பாவையின் 20 பாடல்களில் உலகத்தில் உள்ள உயிர்களை அனைத்தையும் மாயை எண்ணும் தூக்கத்தில் இருந்த எழுந்து கொள்ளும் படியும், சிவ பெருமானின் பெருமைகளை பாடி பக்தி செய்ய வருமாறும் அழைத்தார் மாணிக்கவாசகர். திருவெம்பாவையின் இறுதியில் இறைவனிடம் முழுவதுமாக சரணாகதி அடைந்தார். இதைத் தொடர்ந்து திருப்பள்ளியெழுச்சி பாடலில் சிவ பெருமானை துயில் எழுப்பி, அருள் செய்யும் படி கேட்கிறார்.
திருப்பள்ளியெழுச்சியின் முதல் பாடலின் துவக்கத்திலேயே எங்களுக்கு எல்லாமே நீ தான் என இறைவனிடம் தன்னை முழுவதுமாக ஒப்படைத்து விட்டார். உலக உயிர்களை எல்லாம் காப்பாற்றுபவனாகி இறைவனின் மென்மையான மலர்களுக்கு ஒப்பாகவும், அவர் கோவில் கொண்டிருக்கும் திருப்பெருந்துறை தலம் எத்தனை பசுமையான இயற்கை வளங்கள் நிறைந்த இடமாக உள்ளது என்றும் வர்ணித்துள்ளார். சிவ பெருமானை உலகத்தை ஆளும் அரசன் எனக் குறிப்பிட்டு, கொடியில் நந்தியை அடையாள சின்னமாக கொண்டவனே என்றும் புகழ்கிறார்.