திருப்பதி ஏழுமலையான் கோவிலில்.. தரிசன டிக்கெட் கட்டணம் குறைச்சிருக்காங்களா.. உண்மை என்ன?

Manjula Devi
Jun 24, 2024,11:46 AM IST

திருப்பதி: திருப்பதியில் முன்பதிவு தரிசன கட்டணம் 300 ரூபாயிலிருந்து 200 ஆகவும், 50 ரூபாயாக இருந்த லட்டு கட்டணம் தற்போது 25 ரூபாயாகவும் குறைக்க உள்ளதாக சோசியல் மீடியாவில் பொய்யான செய்திகள் பரவி வருகின்றன. இது முற்றிலும் வதந்தி எனவும், விலையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


ஆந்திரா மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு வைணவ தலமாகும். 108 திவ்ய தேசத்தில் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக திருப்பதி ஏழுமலையான் கோவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.




திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பல பகுதிகளில் இருந்தும் சாமி தரிசனம் செய்ய தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இது தவிர வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களான பண்டிகை காலங்களில் கூடுதலான எண்ணிக்கையில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான மக்கள் வருகின்றனர். இங்கு வரும் மக்கள் பொது தரிசனத்திற்காக ஐந்து முதல் பத்து மணி நேரம் வரை காத்திருந்து  தரிசனம் செய்கின்றனர். தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அறைகள் முழுவதும் நிரம்பி வழிகின்றன. அந்த சமயத்தில் பக்தர்கள் மூன்று கிலோ மீட்டர் ஏசிடிசி காம்ப்ளக்ஸ் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்படும். 


சிறப்பு தரிசன கட்டணம் 


இதனைத் தடுக்க கடந்த சில வருடங்களாக, முன்கூட்டியே  300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பதிவு செய்யும் நடைமுறையை திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்கள் இரண்டு முதல் மூன்று மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதில் தரிசனம் செய்யும் நேரம் குறைவு என்பதால் மக்களிடம் இந்த முன்பதிவு நடைமுறை பெரும் ஆதரவை பெற்றது.


இதற்கிடையே இக்கோவிலுக்கு  கோவிந்தா கோவிந்தா என்ற கரகோசத்துடன் ஆர்வமுடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய  வரும் பக்தர்களுக்காக திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளையும் திட்டங்களையும் அவ்வப்போது வகுத்து வருகிறது. 


கட்டணக் குறைப்பு வதந்தி 


இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க முன்பதிவு தரிசன டிக்கெட் 300 ரூபாயிலிருந்து 200 குறைக்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல 50 ரூபாய் இருந்த லட்டு கட்டணம் தற்போது 25 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இந்த செய்திகள் முற்றிலும் பொய்யானது. சிறப்பு முன் பதிவு தரிசன கட்டணம் 300 மற்றும் லட்டு பிரசாதத்தின் விலை 50. இதில் எந்த மாற்றமும் இல்லை என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.