கேரளா, ஆந்திரா, தெலங்கானாவில் விடுதலை சிறுத்தைகள் போட்டி - திருமாவளவன் அறிவிப்பு

Meenakshi
Mar 05, 2024,06:09 PM IST

கேரளா: நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் கேரளாவில் 3, தெலுங்கானாவில் 10 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட உள்ளது. ஆந்திராவில் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடக்கிறது என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்  அறிவித்துள்ளார்.


நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், அதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணி குறித்து தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர்.ஒரு சில கட்சிகள் கூட்டணி குறித்த இறுதி முடிவை எடுக்கும் நிலையிலும் உள்ளன.


திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அக்கட்சியின் தென்மாநிலங்களின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், கேரளாவில் 3, தெலுங்கானாவில் 10 தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது என்றும், ஆந்திராவில் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடக்கிறது எனவும் கூறியுள்ளார். 




இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ஆந்திர, கர்நாடக, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாநில தலைவர்கள், பொறுப்பாளர்கள், பொதுச் செயலாளர், முன்னணி நிர்வாகிகள் பலரும் இன்றைய கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆந்திர மாநில தலைவர் வித்யாசகர், பொதுச்செயலாளர் சிவ பிரசாத், தெலங்கானா மாநிலத் தலைவர் ஆகியோரும் பங்கேற்று கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.  தமிழகத்தை பொறுத்தவரை திமுகவிடம் இருந்து அழைப்பு வந்தால் உடனடியாக மீண்டும் பேச்சுவார்த்தைக்கு செல்வோம். திமுகவிடம் எங்களது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளோம்.


மின்னணு இயந்திரத்தில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளை எண்ணி வாக்கு முடிவுகளை அறிவிக்க வேண்டியது இன்றியமையாதது. தெலங்கானாவில் 10 தொகுதிகளிலும், கர்நாடகாவில் 6 தொகுதிகளிலும், கேரளாவில் இடுக்கி உட்பட 3 தொகுதிகளில் விசிக போட்டியிடும். அதேபோல் ஆந்திராவில் போட்டியிடுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.


எங்கள் பலம் குறித்து நாங்கள் தான் மதிப்பீடு செய்ய முடியும். ஆகவே  எங்கள் பலம் எங்களுக்கு தெரியும் என்பதால் தான் கோரிக்கை வைத்துள்ளோம்.பானைச் சின்னம் ஒதுக்கப்படும் என்று நம்புகிறோம். பானைச் சின்னம் நாங்கள் பயன்படுத்திய சின்னம் தான். எங்களை பொருத்த வரையில் இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது தான் முதன்மையானது என்று தெரிவித்துள்ளார்.