தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு.. டிச.31ல் மழைக்கு வாய்ப்பிருக்காம்!
சென்னை: டிசம்பர் 31ம் தேதி தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வட கிழக்கு மழை தீவிரமடைந்து மிக்ஜாம் புயல் உருவானபோது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகின. பின்னர் வங்கக் கடல் சுழற்சி காரணமாக பெய்த பேய் மழையால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன.
இந்த தீவிர கனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்கள் இன்னும் முழுமையாக மீளாத நிலையில், இந்த வருடத்தின் முடிவில் அதாவது டிசம்பர் 31ம் தேதி இதே மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, டிசம்பர்- 27 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் 28 தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மட்டும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிசம்பர் 29 மற்றும் 30 தேதிகளில் தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் 31 தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்பு உள்ளது.
ஜனவரி 1, 2 தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், டிசம்பர் 27, 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக் காற்று வீச இருப்பதால், மீனவர்கள் கடலுக்கு போக வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம்.