தமிழ்நாட்டை வச்சு செய்யும் மழை.. வலுவிழந்த தாழ்வு.. இன்றும் கனமழை.. டிச14ல்.. மீண்டும் ஒன்று வருதாம்
சென்னை: மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. இதனால் தமிழ்நாட்டில் இன்றும் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல் வரும் டிசம்பர் 14 வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாகவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்தது. இதனால் தமிழ்நாட்டில் வடக்கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.இதற்கிடையே வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் குமரிக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வலுவலுக்கும் எனவும் நேற்று அறிவித்திருந்தது.
அதன்படி தற்போது மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. இது மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவி வருகிறது. இந்த வலுவிழந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது டிசம்பர் 14ஆம் தேதி காலை 9 மணி அளவில் மேற்கு வடமேற்கு திசையில் குமரி கடல் வழியே மாலத்தீவு மற்றும் அதன் ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளை நோக்கி நகர்ந்து மேலும் படிப்படியாக வலுவிழக்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நாளை மற்றும் நாளை மறுதினம் கனமழை எச்சரிக்கை எதுவும் கொடுக்கப்படவில்லை. எனவே நாளை மீண்டும் வங்க கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 16ஆம் தேதி தமிழ்நாடு இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் எனவும் இதன் காரணமாக தமிழ்நாட்டில் மீண்டும் 16ஆம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புழல் ஏரியில் நீர் திறப்பு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் மிக முக்கியமானது புழல் ஏரி. 3300 மில்லியன் கன அடி கொண்ட புழல் ஏரியில் தற்போது 2956 மில்லியன் கன அடி தண்ணீர் நிரம்பி உள்ளது. 21.2 அடி கொண்ட இந்தப் புழல் ஏரி வேகமாக நிரம்பி வருவதால் பாதுகாப்பு கருதி இன்று காலை முதல் ஏரியிலிருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த உபரி நீர் திறப்பால் கால்வாய் ஓரம் வசிக்க கூடிய மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்