மயிலாடுதுறையில்.. 4 நாளாக போக்கு காட்டும் .. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர வேட்டை!

Manjula Devi
Apr 05, 2024,07:47 PM IST

மயிலாடுதுறை: கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை இன்று வரை பிடிபடாமல் போக்கு காட்டி வருகிறது. இதனைப் பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக முயன்று வருகின்றனர்.


மயிலாடுதுறை செம்மங்குளம் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதனால் பொதுமக்கள் பீதியில் உறைந்தனர் ‌. மேலும் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என  தீவிர கண்காணிப்பில் தொடர்ந்து வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என காவல்துறை வேண்டுகோள் விடுத்திருந்தனர். அப்பகுதியில் உள்ள  பள்ளிகளுக்கும் இரண்டு நாட்களாக  விடுமுறை கொடுக்கப்பட்டது.


இந்த நிலையில் ஆரோக்கியநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தையை தேடும் பணி இன்றுடன் 4வது நாளாக நீடித்து வருகிறது. ஆனால் இதுவரை சிறுத்தை கண்ணில் தென்படவில்லை. பொதுமக்கள் யாருக்கும் அசம்பாவிதம் ஏற்படாதவாறு சிறுத்தையை விரைவில் பிடிக்க வேண்டும் என ராட்சத வலை, கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளனன. ஆனால் இப்பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தை சித்தர்காடு பகுதிக்கு சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.




ஏனெனில் சித்தர்காடு அருகே ஆடு ஒன்று கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. இதனை பார்த்த வனத்துறையினர் அந்த ஆட்டை சிறுத்தை தான் வேட்டையாடிதோ என்ற சந்தேகம் எழுந்தது‌ள்ளது. இதனால்  மருத்துவ குழுவினர் இறந்த ஆட்டை ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது சிறுத்தையை பிடிக்க சித்தர்காடு பகுதியில் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர் .


சிறுத்தையைப் பிடிக்க டிரோன் மூலமாகவும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. மயிலாடுதுறையில் போக்கு காட்டி வரும் சிறுத்தை இன்றாவது பிடிபடுமா என்று ஐயத்தில் மக்கள் தவித்து வருகின்றனர்.