விண்ணை பிளக்கும் உற்சாகத்துடன் வெளியான குட் பேட் அக்லி.. விழா கோலம்பூண்ட திரையரங்குகள்..!
சென்னை: ரசிகர்களின் விண்ணை பிளக்கும் உற்சாகத்துடன் வெளியானது அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
அண்மையில் அஜித்தின் பல கெட்டப்புகளை மையப்படுத்தி வெளியான படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதனை தொடர்ந்து படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
இந்த நிலையில் உலகம் முழுவதும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு முதல் ஷோ வெளியாகி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திரையரங்குகள் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள ராட்சத பேனருக்கு மாலை அணிவித்து ரசிகர்கள் மேளதாளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் படத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். அதேபோல் பட்டாசு வெடித்து விசில் அடித்து ஏகே ஏகே என உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக நடிகை ஷாலினி தனது மகளுடன் கணவர் அஜித்தின் படத்தை காண வந்தார். ரோகினி திரையரங்கிற்கு வந்த நடிகர் அர்ஜுன் தாஸ் படம் குறித்து எக்சைட்மென்ட் அதிகமாக இருக்கிறது அனைவரும் படத்தைப் பாருங்கள் என கூறினார் .
அதேபோல் மதுரையில் ஆண்களுக்கு நிகராக பெண் ஒருவர் டிரம்ஸ் வாத்தியங்களுக்கு நடுவே நின்று படத்தை வரவேற்க நடனம் ஆடினார். அதை மற்ற ரசிகர்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.
இதற்கு முன்னதாக அமெரிக்காவில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதேபோல் பெங்களூரு உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் குட் பேட் அக்லி திரைப்படம் காலை 8 மணிக்கு வெளியானது. அதன்படி படத்தின் முதல் பாதியை சிறப்பாக இருப்பதாகவும் இரண்டாம் பாதியை கதை இழு பறியாக இருப்பதாகவும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். எப்படி இருந்தாலும் அஜித் ரசிகர்களுக்கு குட் பேட் அக்லி திரைப்படம் ட்ரீட் தான் என கொண்டாட்டத்தில் கொஞ்சம் கூட குறைவில்லாமல் படத்தை ரசித்து வருகின்றனர்.