2400 வருடங்களுக்கு முன்பு.. இங்குதான் மாவீரன் அலெக்சாண்டர்.. முடி சூடினார்.. எவ்வளவு பிரமாண்டம்!

Su.tha Arivalagan
Jan 09, 2024,05:51 PM IST

ஏதென்ஸ்:  கிரேக்க மாவீரன் அலெக்சாண்டர் முடி சூடிக் கொண்ட அரண்மனை புதுப் பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து விடப்பட்டுள்ளது. பார்க்கவே பிரமாண்டமாக இருக்கும் இந்த அரண்மனையின் மிச்சங்கள் அலெக்சாண்டர் காலத்து கம்பீரத்தை இன்றும் கூட வெளிப்படுத்தியபடி அட்டகாசமாக காட்சி தருகிறது.


அய்கை  அரண்மனை (The Palace of Aigai) என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை ஒரு காலத்தில் மாசிடோனியா  நாட்டின் மாபெரும் ராஜ மாளிகையாக திகழ்ந்தது. மாசிடோனியா மன்னராக அலெக்சாண்டர் கோலோச்சிய காலத்தில் இந்த அரண்மனையில் இருந்தபடிதான் ஆட்சி செய்தார். கிரேக்க சாம்ராஜ்ஜியத்தின் அதி நவீன மற்றும் மிகப் பெரிய மாளிகை என்ற பெயரும் இந்த அரண்மனைக்கு உண்டு.  கிட்டத்தட்ட 15,000 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த பிரமாண்ட அரண்மனை அமைந்திருந்தது.




இந்த அரண்மனையின் பெரும் பகுதியை, அலெக்சாண்டரின் தந்தையான, மாசிடோனியா மன்னர் 2வது பிலிப் கட்டினார். கி.மு.4வது நூற்றாண்டில் கட்டப்பட்டது இந்த அரண்மனை. அலெக்சாண்டர் இந்த அரண்மனையில்தான் முடி சூடிக் கொண்டார். அவரது பதவியேற்பு விழா இங்குதான் நடந்தது. தனது தந்தை படுகொலை செய்யப்பட்ட பிறகு மன்னராக முடிசூடினார் அலெக்சாண்டார்.  அதன் பிறகுதான் அவரது உலக நாடுகளை பிடிக்கும், போர்ப் படலம் தொடங்கியது. 


அலெக்சாண்டரின் அரசாட்சி உலகின் பல நாடுகளிலும் பரவிக் கிடந்தது. இப்போதைய கிரீஸ் முதல் எகிப்து, ஈரான்,  இந்தியாவின் வட பகுதி, மத்திய ஆசியா என்று அலெக்சாண்டரின் ராஜ்ஜியம் விரிந்திருந்தது.  மேற்கத்திய வரலாற்றில் இப்படி ஒரு மாவீரனை அப்போது மக்கள் கண்டதில்லை. கிட்டத்தட்ட தோல்வியே காணாத மாவீரனாக வலம் வந்தவர் அலெக்சாண்டர்.




தனது காலத்தில் அவர் பெற்ற வெற்றிகள்தான் அடுத்த 1000 ஆண்டுகளுக்கு ரோம சாம்ராஜ்ஜியத்தை வலுப்படுத்த உதவியது. அதற்கான அடித்தளத்தை இட்டவர் அலெக்சாண்டர்தான். அய்கை அரண்மனையானது, இப்போதைய வெர்ஜினா நகரில் உள்ளது. பல வருடங்களாக இந்த இடத்தைப் புதுப்பிக்கும் பணிகள் நடந்த வந்தன.  இந்த இடத்திலிருந்து பல வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பொருட்கள் அகழாய்வு செய்யப்பட்டுள்ளன. பழைய ஏற்பாடு புத்தகத்தின் ஆதி பிரதியும் இங்கு கிடைத்துள்ளது.


இந்த இடத்தை புதுப்பித்து உயிரூட்டுவதற்கு 16 ஆண்டு காலம் பிடித்தது. கிட்டத்தட்ட 21.9 மில்லியன் டாலர் பொருட் செலவில் இந்த புதுப்பிக்கும் பணிகள் நடந்தன.  புதுப்பிக்கும் பணியின் ஒரு பகுதியாக அகழாய்வுப் பணிகளும் நடந்தன. அதில் கிடைத்த பொருட்களை தனியாக அருங்காட்சியகம் அமைத்து பாதுகாப்பாக பார்வைக்கு வைத்துள்ளனர். இந்த அரண்மனையில் பயன்படுத்தப்பட்ட மொசைக் தரையின் 1400 சதுர மீட்டர் பரப்பளவிலான தளத்தை கிரேக்க அரசு மீட்டுள்ளது. பல தூண்களும் பத்திரமாக புதுப்பிக்கப்பட்டுள்ளன. 




அந்தக் காலத்தில் அரண்மனை எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்கக் கூடிய வகையில் இந்த புதுப்பிக்கும் பணி தத்ரூபமாக நேர்த்தியாக நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.