மண்டல பூஜைக்கு அதிகரித்து வரும் சபரிமலை ஐயப்ப பக்தர்கள்.. இதுவரை 27 லட்சம் பேர் சுவாமி தரிசனம்!
கொச்சி: சபரிமலை கோவிலுக்கு இந்த வருடம் நவம்பர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 26 ஆம் தேதி வரை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஒரு மாத காலத்தில் மட்டும் மண்டல பூஜை யாத்திரையில் சுமார் 27 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கார்த்திகை மாதம் தொடக்கத்தில் இருந்தே சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கத் தொடங்குவது வழக்கம். ஐயப்பனை தரிசிக்க கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு,ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு செல்கின்றனர். கடந்த ஆண்டு சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் சிரமப்பட்டனர். பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசிக்கும் நிலைமை ஏற்பட்டது. .இதில் முதியவர்கள், குழந்தைகள், மூதாட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் கூட்ட நெரிசல் ஏற்படாமல் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காக சபரிமலை தேவஸ்தானம் சார்பில் கார்த்திகை மாத தொடக்கத்தில் இருந்தே பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் வசதிக்காக இந்த ஆண்டு தினமும் 18 மணி நேரம் கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்து வருகின்றனர்.அதன்படி பக்தர்கள் தரிசனத்திற்காக அதிகாலை 3 மணி முதல் கோவில் நடை திறக்கப்பட்டு, பகல் 1 மணி வரையிலும், பிறகு மீண்டும் நடை அடைக்கப்பட்டு, மாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 11 மணி வரையிலும் நடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் சாமி தரிசனம் செய்யும் போது கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, ஏற்கனவே மலையேறிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்த பின்னர், மீண்டும் பம்பா நதியிலிருந்து தினசரி பகல் ஒரு மணியில் இருந்து பக்தர்கள் செல்வது போன்ற சிறப்பு ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. இந்த சிறப்பு ஏற்பாடு காரணமாக இந்த வருடம் கூடுதலாக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
நவம்பர் 16 முதல் டிசம்பர் 26ஆம் தேதி வரை மண்டல பூஜைகள் நடைபெற்று பின்னர் நடை அடைக்கப்படும். இதனைத் தொடர்ந்து மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, 2025ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜை யாத்திரையில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் சுமார் 27 லட்சம் பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்