ரம்ஜான்னா பிரியாணி மட்டும்தானா?

Su.tha Arivalagan
Apr 22, 2023,12:45 PM IST
- மகா

ஈத் முபாரக் ...  அனைவருக்கும்! இன்று ரமலான் திருநாள். நம் அனைவருக்கும் ரமலான் என்றால்  பிரியாணி தான் ஞாபகத்துக்கு வரும். அது ஏன் அப்படின்னு தெரியலை.

தர்மேஷுக்கும், ஹரிக்கும் இந்தக் கவலைதான்.

"டேய்,  தர்மேஷ் உனக்கு  ரம்ஜானுக்குப் பிரியாணி கிடைக்குமா?"

" இல்லடா எனக்கு முஸ்லிம் பிரண்ட்ஸ் யாரும் இல்லையேடா"

"எனக்கு பிரெண்ட்ஸ் இருக்காங்கடா ! வீட்டுக்கே பிரியாணி வரும்"



இப்படிப் போனது அவர்களின் அந்த கலகல உரைடாயல். ஹரி அவங்க டியூஷன் மேமையும் விடல.  "மேம் உங்களுக்கு பிரியாணி வருமா" என்று ஆர்வத்துடன் கேட்க அதற்கு அந்த டியூஷன் மேமோ எனக்கு கண்டிப்பா பிரியாணி வரும்.  எனக்கு நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்க என்று அவர்.. மெல்ல ரம்ஜான் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

ரம்ஜான் என்றாலே பிரியாணி தான்னு  நினைக்கிறோம். ஆனால் ரமலான் என்பது ஒரு புனிதமான மாதத்தில் வரும் திருநாள். இந்த மாதத்தில் உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமிய நண்பர்கள் நோன்பை அனுசரிக்கிறாங்க. இஸ்லாமிய நம்பிக்கையின்படி முகமது நபிக்கு முதன் முதலில் குர்ஆனை வெளிப்படுத்திய மாதத்தை நினைவு கூறும் விதமாக இந்த  நோன்பை கடைப்பிடிக்கிறாங்க.  

ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகின்ற ரம்ஜான் நோன்பு இஸ்லாத்தின் ஐந்து தூண்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. நிலவின் பிறை காட்சி மற்றும் ஹதீஸ்களில் தொகுக்கப்பட்டுள்ள பல்வேறு  வாழ்க்கை வரலாறுகளின் படியும் 29  -  30 நாட்கள் வரை  நோன்பு இருக்கலாம்.  ரமலான் என்ற அரேபிய வார்த்தை ரமீதா அல்லது அர்-ரமத், அப்படின்னா  சுடு வெப்பம் இல்லன்னா உலர் தன்மை, அதிலிருந்து  வருவிக்கப்பட்டுள்ளது

காலைல  சூரியன் உதிக்கும் நேரத்தில்  ஆரம்பிச்சு சூரியன் மறையும் வரை நோன்பு இருப்பாங்க. சாப்பாடு தண்ணீர் எதையுமே சாப்பிட மாட்டாங்க அதே மாதிரி தீய விஷயங்கள்,  அதாவது குடிக்கிறது சிகரெட் பிடிக்கிறது மத்தவங்கள துன்புறுத்துறது,  அந்த மாதிரி எந்த ஒரு தப்பும் பண்ண மாட்டாங்க .

உடனே குறுக்கிட்ட ஹரி , என்னது தண்ணி கூட குடிக்க  மாட்டாங்களா?  ரொம்ப கஷ்டமாச்சே , என்னால அப்படி இருக்கவே முடியாது என்று வெளிப்படையாக கூறினான்

மேம்,  ரம்ஜான் நோன்பு யாரெல்லாம் கடைப்பிடிப்பாங்க? எப்படி கடைப்பிடிப்பாங்க? கொஞ்சம் சொல்றீங்களா? என்று ஹரி ஆர்வத்துடன் கேட்க,  டியூஷன் மேமோ, வயது வித்தியாசமெல்லாம் கிடையாது.. எல்லோரும் இதைக் கடைப்பிடிக்கலாம் என்றார்.

அதேமயம், நோய்வாய்ப்பட்டவங்க, பயணம் பண்றவங்க, முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் , பாலூட்டும் தாய்மார்கள் , இவங்க எல்லாம்  நோன்பு இருக்க மாட்டாங்க. நோன்பு முன்னாடி சாப்பிடுற சாப்பாட்டுக்கு பேர் "ஸகர்"  என்றும் நோன்பு முடிந்ததுக்கப்புறம் "இப்தார்" என்றும் சொல்லுவாங்க.  இந்த மாதிரி நோன்பு இருக்கும் போது ஆன்மீக வெகுமதி பெருக்கப்படும் என்று நம்புறாங்க. 

ரம்ஜான் குறித்தும், நோன்பு குறித்தும் டீச்சர் விலாவாரியாக சொல்லி முடித்தபோது ஹரியும், தர்மேஷும் ஆச்சரியத்தில் மூழ்கியிருந்தனர்.

"ரம்ஜான்னா பிரியாணி என்று  நெனச்சிட்டு இருந்தேன் ஆனால்,  இவ்ளோ கஷ்டப்பட்டு நோன்பு  இருக்கிறதை இப்பதான் நான் புரிஞ்சுகிட்டேன் மேம். என் பிரண்ட்ஸ்க்கு முதல்ல போய் நான் அட்வான்ஸ் ரம்ஜான் வாழ்த்துக்கள் சொல்ல போறேன்" என்று ஆர்வத்துடன் கிளம்பினான். 

என்ன ஃபிரண்ட்ஸ்.. உங்க நண்பர்களுக்கெல்லாம் "ஈத் முபாரக்" சொல்லிட்டீங்களா!