போலீஸ் பாதுகாப்புடன் 22 மாதங்களுக்குப் பிறகு.. திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோவில்..!

Manjula Devi
Apr 17, 2025,11:30 AM IST

விழுப்புரம்: நீதிமன்றத்தின் உத்தரவின் படி 22 மாதங்களுக்குப் பிறகு மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்பட்டது. 



விழுப்புரம் மாவட்டம் அருகே மேல்பாதி கிராமத்தில் அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற திருவிழாவின்போது பட்டியலின சமூக மக்கள் வழிபாடு செய்ததற்கு வேறு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டது. பின்னர் கோவில் சீல் வைக்கப்பட்டது.


இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோவில் என்பது அனைவருக்கும் பொதுவானது. எனவே, அனைத்து தரப்பு மக்களும் திரௌபதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம். கோவிலை சுற்றி சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்க வேண்டுமென உத்தரவிட்டது. 




இந்த நிலையில் நீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க சுமார் 22 மாதங்களுக்குப் பிறகு மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் போலீஸ் பாதுகாப்புடன் இன்று திறக்கப்பட்டது. மேலும் விழுப்புரம் மாவட்டம்  எஸ்பி சரவணன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் ஊர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 


திரௌபதி அம்மன் கோவில் இன்று காலை 6:15 மணிக்கு திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பட்டியலின சமூக மக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்து வருகின்றனர்.