தர்மன் சண்முகரத்தினம்.. சிங்கப்பூர் புதிய அதிபராக இன்று பதவியேற்பு!
Sep 14, 2023,02:05 PM IST
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இன்று தமிழ் வம்சாவழியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்கிறார்.
ஆசிய நாடான சிங்கப்பூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கிறார்கள். சிங்கப்பூரின் அதிபரான ஹலீமாவின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழரான தர்மன் சண்முகரத்தினம் , இங்கொக் சொங் மற்றும் டாங்கின் லியோ ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில் 70.4 சதவீத வாக்குகளுடன் தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றார்.
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் 1957ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்தார். இவரது தாத்தா மற்றும் பாட்டி சிங்கப்பூரில் குடியேறியவர்கள். இவரது தந்தை கனகரத்தினம் மருத்துவத் துறையில் சிறந்து விளங்கியவர்.
வர்த்தகம் மற்றும் பொருளாதார நிபுணராக விளங்கியவர் தர்மன் சண்முக ரத்தினம். இவர் 2001 ஆம் ஆண்டு சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியில் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை கல்வி மற்றும் நிதி அமைச்சராகவும், துணை பிரதமராகவும் பணியாற்றினார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியலை விட்டு விலகி வந்தார்.