சிங்கப்பூர் அதிபர் தேர்தல்.. வாகை சூடினார்.. தமிழர் தர்மன் சண்முகரத்தினம்
சிங்கப்பூர்: சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றுள்ளார். சிங்கப்பூரின் 9வது அதிபராக பொறுப்பேற்கவுள்ளார் தர்மன் சண்முகரத்தினம்.
தமிழரான தர்மன் சண்முகரத்தினம் முன்னாள் அரசியல்வாதி ஆவார். கடந்த 2001 இல் சிங்கப்பூரின் ஜுரோங் தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதி அமைச்சர், கல்வி அமைச்சர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். இந்த நிலையில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் அரசியலை விட்டு விலகினார்.
சிங்கப்பூரில் தமிழ் மக்கள் 2வது பெரிய இனமாக உள்ளனர். அவர்களுக்கு மத்தியில் தர்மன் சண்முகரத்தினத்துக்கு நல்லஆதரவு இருந்தது. தற்போதைய அதிபர் ஹலிமா யாக்கோபின் பதவிக்கலாம் அடுத்த மாதம் 13ம் தேதியுடன் முடிவடைகிறது. இதை அடுத்து புது அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கு அழைப்பு விடு்கப்பட்டது.
இந்த தேர்தலில் தர்மன் சண்முகரத்தினம், சீன வம்சாவளியை சேர்ந்த இன் கொக் செங் மற்றும் டான் கிங் லியான் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மூவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். மூன்று பேருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இந்த நிலையில் நடந்த தேர்தலில் தர்மன் சண்முகரத்தினம் அபார வெற்றி பெற்றார். 70 சதவிகிதம் வாக்குகளைப் பெற்று தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றுள்ளார். சிங்கப்பூரின் 9வது அதிபராக இவர் பொறுப்பேற்கவுள்ளார்.
இதற்கு முன்பு தமிழரான எஸ்.ஆர். நாதன் எனப்படும் செல்லப்பன் ராமநாதன் 2009ம் ஆண்டு அதிபராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றினார். தற்போது 2வது தமிழராக தர்மன் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் சிங்கப்பூர் அதிபராவது இது மூன்றாவது முறையாகும்.