"வேல் வேல் வெற்றி வேல்"..  தமிழகம் முழுவதும் எதிரொலித்த கந்த கோஷம்.. தைப்பூசம் கோலாகலம்!

Meenakshi
Jan 25, 2024,11:25 AM IST

சென்னை: தமிழ்நாடு  முழுவதும் கோலாகலமாக தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.


தை மாதத்தில் வரும் பூசம் நட்சத்திரம், தமிழ் கடவுளாம் முருகப்பெருமானுக்கு உகந்த நாள். முருகப் பெருமான் அசுரர்களை அழித்து தேவர்களை காக்க அன்னை பராசக்தியிடம் ஞானவேலை பெற்ற தினமே தைப்பூச தினமாகும். இந்ந நாளில் முருகனுக்கு தமிழகம் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள முருகன் கோவிலில்  தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


முருகனுக்கு பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்பட்டாலும் தைப்பூசம் தனிச்சிறப்பு உடையதாகும். இந்நாளில் முருகப்பெருமானின் அருள் பெற விரதம் இருத்தல் முதன்மையானதாக கருதப்படுகிறது. இந்த விரதம் இருப்போருக்கு நினைத்தது நடக்கும், வேண்டுவது கிடைக்கும் என்பது ஐதீகம்.




தை மாதம் 11ம் தேதி ஜனவரி 25ம் தேதி தைப்பூசமாகும். காலை எழுந்து குளித்துவிட்டு, காலை முதல் மாலை வரை முருகனை நினைத்து விரதம் இருந்து கோவிலுக்குச் சென்று முருகனை வழிபட்டு வர நன்மையாகும். காலை மற்றும் மதியத்தில் பால், பழம் மட்டும் அருந்தி விரதம் இருக்க வேண்டும். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யலாம்.


தைப்பூசத்தில் முருகனின் அபிஷேகம் ஆராதனையை காண்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும். இந்த நன்னாளில் சுப காரியங்கள் செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் கிடைக்குமாம். தைப்பூச தினத்தில் சிவனை வழிபாடு செய்தால் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.


இத்தகைய சிறப்புடைய இந்நாளில் தமிழகத்தில் உள்ள ஆறுபடை வீடுகளான பழனி, திருச்சந்தூர், திருத்தணி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட கோவில்களிலும், மற்ற முருகன் கோவில்களிலும் இன்று சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து முருகன் தலங்களிலும் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து திருத்தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைகடல் என அலைமோதி வருகின்றன. பல மணிநேரம் வரிசையில் நின்று முருகனை வழிபட்டு வருகின்றனர்.