Thai Pournami 2025.. தை மாத பௌர்ணமி 2025.. தை கடைசி நாள்.. முருகன் வழிபாட்டில் காவடி!

Swarnalakshmi
Feb 12, 2025,12:59 PM IST

- ஸ்வர்ணலட்சுமி

சென்னை: தை மாத பெளர்ணமி இன்று. தை மாதத்தின் கடைசி நாளும் கூட. இந்த நாளில், முருகன் வழிபாட்டில் காவடி எடுத்து வழிபடும் முறை பற்றிய தகவல் அறிவோம்.

பிப்ரவரி 12ஆம் தேதி புதன்கிழமை பௌர்ணமி திதியும் ஆயில்ய நட்சத்திரமும் சேர்ந்து வருவது மிகவும் சிறப்பு. நம் எல்லா குறிக்கோள்களையும் இறைவனிடம் வேண்டுதலாக வைத்து வழிபட சிறப்பான நாள் இந்த பௌர்ணமி திதி.

பௌர்ணமி என்றாலே முழு நிலவு வழிபாடு. கற்கண்டு பொங்கல் வைத்து நமது பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தொழில் மேன்மை பெற பௌர்ணமி நாளில் செய்யலாம். புதிதாக கட்டிடம் கட்டுபவர்கள் போர்வெல் போட கிணறு வெட்ட உகந்த நாள் .தான தர்மம் செய்ய குலதெய்வ வழிபாடு செய்ய உகந்த நாள்.

பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைப்பான் முருகன். அதற்காக ,காவடி சுமந்து முருகனை வழிபாடு செய்வார்கள். இப்படி காவடி தோன்றிய வரலாற்றை பார்ப்போம்.





காவடி தோன்றிய வரலாறு:

இடும்பன் உருவாக்கிய காவடி வழிபாடு: இடும்பன் அகஸ்திய முனிவரின் சீடன். அவன் தன் குருவின் கட்டளைப்படி கவுதடி என்கிற தடியின் இரு புறங்களிலும் சிவகிரி மற்றும் சக்தி கிரி என்னும் மலைகளை கட்டி பொதிகை மலை நோக்கி பயணம் செய்தான் .பழனி என்ற இடத்தில் மலைகளை இறக்கி இளைப்பாறினான். அப்போது முருகன் ஒரு திருவிளையாடல் நிகழ்த்தினார். இவ்விருமலைகளை திருவாவினன்குடியில் நிலைபெறச் செய்து இடும்பனின் வேண்டுகோளுக்கு இணங்க பழனி முருகனின் காவல் தெய்வமாக அருள்புரிந்தார் .இடும்பன் முருகனிடம் காவடி சுமந்து வரும் முருக பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற வரம் கேட்டு வாங்கினான். அதனால் ,காவடி ஏந்தி வழிபாடு செய்வது வழக்கமானது .முருகன் அருள் நிச்சயம் கிடைக்கும்.

1. தங்கக்காவடி நீடித்த புகழ் கொடுக்கும்.
2. வெள்ளி காவடி நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். காவடிகளில் மொத்தம் 20 வகைகள் இருப்பதாக ஆகம விதிகள் கூறுகின்றன. ஒவ்வொரு வகை காவடிக்கும் ஒவ்வொரு பலன் உண்டு.
3.பால் காவடி செல்வ செழிப்பு உண்டாகும்.
4. சந்தன காவடி எடுக்க வியாதிகள் நீங்கும்.
5. பன்னீர் காவடி எடுக்க மனநல குறைபாடு விலகும்.
6. அன்னக்காவடி எடுக்க வறுமை நீங்கும்.
7. சர்க்கரை காவடி எடுத்தால் சந்தான பாக்கியம் கிடைக்கும்.
8 அலங்கார காவடி எடுக்க திருமண தடை நீங்கும்.
9. அக்னி காவடி திருஷ்டி தோஷம் நீங்கும்.
10. இளநீர் காவடி எடுக்க சரும நோய் நீங்கும்.
11. கற்பூர காவடி எடுக்க வயிற்று பிரச்சினைகள் நீங்கும்.
12. சர்ப்பக் காவடி எடுக்க குழந்தை வரம் கிட்டும்.
13. சேவல் காவடி எடுக்க எதிரிகள் தொல்லை நீங்கும்.
14. மஞ்சள் காவடி எடுக்க வெற்றி கிடைக்கும்.
15. மலர் காவடி எடுக்க நினைத்த காரியம் கைகூடும்.
16. தேர் காவடி எடுக்க நோய்வாய் பட்டவர் உயிர் பிழைக்க செய்த முருகனுக்கு நன்றி செலுத்துவது ஆகும்.
17. மச்சக்காவடி எடுக்க வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும்
18. மயில் காவடி எடுக்க இல்லத்தில் இன்பம் பெற்று குடும்ப பிரச்சனைகள் அகலும்.
19. பழக்காவடி எடுக்க தொழில் மேன்மை பெறலாம்.
20. வேல் காவடி எடுக்க எதிரிகள் அஞ்சுவர்.

இவ்வாறு காவடி எடுத்து வழிபட முருகன் பக்தர்களை ஒருபோதும் கைவிட மாட்டார், நல்வழி காட்டுவார்.