தை அமாவாசை 2024 : பித்ருக்களின் சாபங்களை போக்கும் அற்புத நாள்

Aadmika
Feb 09, 2024,11:13 AM IST

சென்னை : அமாவாசை என்பது முன்னோர்களை வழிபடுவதற்கு உரிய மிக முக்கியமான நாளாகும். மாதம் தோறும் வரும் அமாவாசைக்கு ஒவ்வொரு தனிச்சிறப்பு உள்ளது என்றாலும், ஆடி, தை மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளாய அமாவாசை ஆகிய மூன்று அமாவாசைகளும் மிகவும் முக்கியமானதாகும். 


வருடத்தின் அனைத்து அமாவாசைகளிலும் விரதம் இருந்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாவிட்டாலும் இந்த மூன்று அமாவாசைகளில் தவறாமல் விரதம் இருந்து வழிபட்டால், வருடம் முழுவதும் அமாவாசை விரதம் இருந்த பலன் கிடைத்து விடும்.


முன்னோர்களின் ஆசி கிடைக்கும்




தை மாதத்தில் வரும் மிக முக்கியமான நாள் தை அமாவாசையாகும். மகாளய அமாவாசை காலத்தில் பூலோகத்திற்கு வரும் நம்முடைய முன்னோர்கள் நம்முடன் தங்கி இருந்து, நம்முடைய வழிபாடுகளை ஏற்று, நமக்கு ஆசி வழங்கி விட்டு, பித்ருலோகத்திற்கு திரும்பிச் செல்லும் நாள் தை அமாவாசை நாளாகும். இந்த நாளில் பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய நீத்தார் கடன் எனப்படும் தர்ப்பணம், படையல் போன்ற வழிபாடுகளை செய்தால் பித்ரு சாபம், பித்ரு தோஷம் ஆகியவை நீங்கும். 


இன்று நாம் கொடுக்கும் தர்ப்பணங்களை நம்முடைய முன்னோர்கள் நேரடியாக ஏற்பதாக சொல்லப்படுவதால் இந்த நாளில் தர்ப்பணம் கொடுப்பதால் நம்முடைய பாவங்கள் மட்டுமின்றி நம்முடைய ஏழு தலைமுறை முன்னோர்கள் செய்த பாவமும் நீங்கி, அவர்கள் மேல் உலகில் நற்கதி அடைவதாக ஐதீகம்.


முன்னோர்களின் ஆசிகளை பெறுவதுடன், அம்பாளின் அருளையும் பெற்று அனைத்து விதமான துன்பங்களில் இருந்தும் விடுபடுவதற்கு ஏற்ற நாள் தை அமாவாசை நாளாகும். தனது பக்தனுக்காக அமாவாசை அன்று முழு நிலவை காட்டி அபிராமி அம்பாள் திருக்கடையூரில் திருவிளையாடல் நிகழ்த்திக் காட்டியதும் இதே தை அமாவாசை நாளில் தான். 


பகல் 1.30க்குள் தர்ப்பணம் கொடுத்து விடுங்கள்




இப்படி பல சிறப்புகளைக் கொண்ட இந்த தை அமாவாசை இந்த ஆண்டு பிப்ரவரி 09ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. காலை 07.53 மணி துவங்கி, பிப்ரவரி 10ம் தேதி காலை 04.34 வரை அமாவாசை திதி உள்ளதால் பிப்ரவரி 09ம் தேதி காலை 8 மணிக்கு பிறகு, பகல் 01.30 மணிக்கும் தர்ப்பணம் கொடுத்து முடித்து விட வேண்டும். உச்சி பொழுதிற்கு மேல் தர்ப்பணம் கொடுக்கக் கூடாது. முன்னோர்களுக்கு உணவு சமைத்து படையல் இடுவதற்கு ஏற்ற நேரமாக பகல் 01.15 முதல் 3 மணி வரையிலான நேரம் சொல்லப்பட்டுள்ளது. 


அதே போல் மாலையில் 06.30 மணிக்கு பிறகு வீட்டில் முன்னோர்களை நினைத்து தனியாக ஒரு விளக்கேற்றி வைத்து, 07.30 மணிக்குள் வழிபடலாம். இந்த நாளில் காகம், நாய், பூனை, பசு மாடு ஆகிய ஜீவராசிகளுக்கு உணவு வழங்கலாம். யாராவது இருவருக்கு அன்னதானம் வழங்குவது மிகவும் சிறப்பானதாகும்.


கஷ்டங்கள் தீர அபிராமி அந்தாதி பாடல் பாடுங்கள்


கடன் பிரச்சனை, தீராத கஷ்டம், வாழ்வில் முன்னேற்றமே இல்லை, திருமணம் நடைபெறவில்லை, குழந்தை இல்லை போன்ற பலவிதமான பிரச்சனைகளால் கஷ்டப்படுபவர்கள் அதிலிருந்து மீளுவதற்கு மாலை 7 மணிக்கு வீட்டில் ஐந்து முக குத்துவிளக்கு ஏற்றி வைத்து, திருக்கடையூர் அபிராமி அன்னையை மனதார வேண்டிக் கொண்டு, அபிராமி அந்தாதி பாடல் பாடி வழிபடலாம். 


ஒவ்வொரு பாடல் முடியும் போதும் குங்குமத்தால் அம்பிகையை நினைத்து அர்ச்சனை செய்து வழிபட்டால் வீட்டில் உள்ள இருண்ட சூழல், கஷ்டங்கள் அனைத்தும் விலகி, ஒளிமயமான வாழ்க்கை அமையும்.