இப்போது இந்தியா வரவில்லை.. டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் திடீர் அறிவிப்பு... ஏன் என்னாச்சு??

Su.tha Arivalagan
Apr 20, 2024,05:07 PM IST

டெல்லி: இந்தியா வருவதாக இருந்த டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் கடைசி நேரத்தில் தனது இந்திய பயணத்தை தள்ளி வைத்து விட்டார். இந்த ஆண்டு கடைசியில் தான் இந்தியாவுக்கு வரத் திட்டமிட்டிருப்பதாக அவர் விளக்கியுள்ளார். அதாவது இந்தியாவில் லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு, புதிய அரசு அமைந்த பிறகுதான் அவர் இந்தியா வர முடிவெடுத்துள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்குச் சென்றிருந்தபோது, அங்கு டெஸ்லா மற்றும் எக்ஸ் தளத்தின் அதிபரான எலான் மஸ்க்கை சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியாவுக்கு வருமாறு அவர் அழைப்பு விடுத்தார். அதை மஸ்க்கும் ஏற்றுக் கொண்டார். டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்புப் பிரிவை இந்தியாவில் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் குஜராத்தில் இந்த புதிய பிரிவை அமைக்க பிரதமர் மோடியும் ஆர்வம் காட்டி வருகிறார்.


மஸ்க்கின் இந்திய வருகையின்போது இது உறுதி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு பலமாக இருந்தது. ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய இரு நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டிருந்தார். அதாவது நாளை வரவிருந்தார். இந்த நிலையில் கடைசி நேரத்தில் தனது பயணத்தை அவர் தள்ளி வைத்து விட்டார். இது இந்தியாவில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மத்திய ஆளும் கட்சியான பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது.




மஸ்க்கின் இந்திய வருகை தங்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று அது கணக்கிட்டிருந்தது. தற்போது இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் முடிந்துள்ளது. இன்னும் 6  கட்டத் தேர்தல் பாக்கி உள்ளது. இந்த நிலையில் மஸ்க்கின் இந்திய வருகையால், டெஸ்லாவின்இந்திய வருகையால் பாஜகவுக்கு அது உதவும், மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் பாஜக இருந்தது.


ஆனால் தற்போது எலான் மஸ்க்கின் முடிவு அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. எலான் மஸ்க் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்று தெரியவில்லை. ஆனால் 23ம் தேதி டெஸ்லா நிறுவனத்தின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதால்தான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்திருப்பதாக சொல்கிறார்கள். அவர் இந்தாண்டு கடைசியில் இந்தியாவுக்கு வரத் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. அதாவது இந்தியாவில் தேர்தல் முடிந்த பிறகே அவர் இந்தியாவுக்கு வருவார் என்று கூறப்படுகிறது.


இதை வைத்துப் பார்க்கும்போது தேர்தல் சமயத்தில் இந்தியாவுக்கு வருவதை மஸ்க் விரும்பவில்லை  என்றும் அர்த்தம் கற்ப்பிக்கப்படுகிறது. எலான் மஸ்க்கின் இந்த முடிவு சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக மஸ்க் இன்னும் விளக்கம் எதையும் வெளியிடவில்லை.