Rafael Nadal.. Ultimate Fighter.. ஓய்வின் சோகத்திலிருந்து விலகாத ரசிகர்கள்.. குவியும் புகழாரம்!

Meenakshi
Nov 20, 2024,03:21 PM IST

பார்சிலோனா: மலகாவில் நடைபெற்ற டேவிஸ் கோப்பையின் காலிறுதிச் சுற்றில்  ஏற்பட்ட தோல்வியுடன் டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடால், சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களும், ரசிகர்களும் தொடர்ந்து புகழாரம் சூட்டி வருகின்றனர்.


ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் ரபேல் நடால் (38). கிட்டத்தட்ட 20 வருட காலமாக டென்னிஸ் உலகில் கோலோச்சி வந்தவர். பல அரிய சாதனைகளை படைத்துள்ளார். டேவிஸ் கோப்பை போட்டியில் தொடர்ச்சியாக 29 ஒற்றையர் பிரிவில் வெற்றிகளை பெற்ற சாதனையாளர். இதுவரை 14 பிரெஞ்சு ஓபன், 2 ஆஸ்திரேலியா ஓபன், 2 விம்பிள்டன், 4 அமெரிக்க ஓபன், 2008 கோடைகால ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் உள்ளிட்ட ஏராளமான சாதனைகளை ரபேல் நடால் படைத்துள்ளார்.




டேவிஸ் கோப்பையில் விளையாடி டென்னிஸ் வாழ்க்கையை தோல்வியுடன் தொடங்கிய ரபேல் நாடல், டேவிஸ் கோப்பையின் கடைசி போட்டியிலும் தோல்வியடைந்து தனது டென்னிஸ் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். 


தெற்கு ஸ்பெயினின் மலகாவில் உள்ள மார்டின் கார்பெனா விளையாட்டு மைதானத்தில் நடந்த டேவிஸ் கோப்பை காலிறுதிச் சுற்றில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரபேல் நடால் தோல்வியுற்றார். 6-4, 6-4 என்ற நேர் செட்களில் தோல்வியுற்றார். ஆட்டம் முடிந்ததும் ரசிகர்கள் அவரது பெயரைச் சொல்லி அவருக்கு விடைகொடுத்தனர். 


இதனை தொடர்ந்து ரபேல் கூறுகையில், அனைவருக்கும் குட் பை.  என்னுடைய அனைத்து சூழலிலும் எனக்கு ஆதரவாக இருந்த எனது குடும்பத்திற்கு நன்றி. வாழ்வில் நடக்கவே இயலாத விஷயங்களில் கூட எனது குடும்பத்தினர் அனைவரும் எனக்கு நம்பிக்கை கொடுத்துள்ளனர். அதே போல் எனது வெற்றியால் உச்சத்திற்கு சென்ற போதும் அவர்கள் தான் என்னை நிதானமாகவும், அமைதியாகவும் ஆக்கினார்கள். 


எதிர் காலத்தில் என்ன நடந்தாலும், அதனை எளிமையாக கையாள முடியும் என்று நம்புகின்றேன். டென்னிஸ் இல்லாமல் இருப்பது கடினம் தான். இதற்கு மேல் டென்னிஸ் விளையாட முடியாது என்று என் உடல் சொல்லி விட்டது. அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் கொஞ்சம் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கின்றேன். அதலால் தான் எனது பொழுது போக்கையே தொழிலாக மாற்ற முடிந்தது. ரசிகர்கள் மனதில் நான் ஒரு சிறந்த மனிதனாக இருக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


ரபேல் நடாலுக்கு டென்னிஸ் ஜாம்பவான்களும் புகழாரம் சூட்டி வருகின்றனர். அவரைப் பற்றி முன்னாள் வீராங்கனை மரியா ஷரபோவா முன்பு கூறுகையில், அல்டிமேட் பைட்டர் என்று வர்ணித்திருந்தார். அது உண்மைதான். போட்டி என்று வந்து விட்டால் கடைசி வரை போராடியபடி இருப்பார் நடால். இனி நடால் இல்லாத டென்னிஸ் களங்கள் சோபையாகவே இருக்கும்.. அந்த வறட்சியைப் போக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பும் தேடலும் தற்போது ரசிகர்களிடையே தொடங்கி விட்டது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்