ஹைகோர்ட் உத்தரவுப்படி.. தென்காசியில் தபால் வாக்குகள் மீண்டும் எண்ணிக்கை!

Su.tha Arivalagan
Jul 13, 2023,10:58 AM IST
தென்காசி: தென்காசி சட்டசபைத் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் எண்ணும் பணி இன்று நடைபெற்றது.

2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்தல் நடைபெற்றது. தென்காசி தொகுதியில் நடை பெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் பழனி நாடார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட செல்வமோகன்தாஸ் பாண்டியன் 370 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியைத் தழுவினார்.

இந்த நிலையில் பழனி நாடார் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் செல்வமோகன்தாஸ் பாண்டியன். அதில் தபால் வாக்குகளை சரியாக எண்ணவில்லை. அதில் முறைகேடு நடந்துள்ளது. எனவே மீண்டும் தபால் வாக்குகளை எண்ண உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தபால் வாக்குகளை மீண்டும் எண்ண  வேண்டும் என்று உத்தரவிட்டது. 

மொத்தம் 2589 தபால் வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில், பழனி நாடாருக்கு 1069 தபால் வாக்குகளும்,  செல்வமோகன்தாஸ் பாண்டியனுக்கு  674 வாக்குகளும் கிடைத்திருந்தன.  இந்த வாக்குகள் அனைத்தும் தற்போது தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் செல்வமோகன் தாஸ் பாண்டியனுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால் அவர் வெற்றி பெறும் வாய்ப்புகள் உள்ளன என்பதால் இந்த மறு வாக்கு எண்ணிக்கை எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.