பொங்கும் வெள்ளம்.. குற்றால அருவியில் குளிக்க தடை விலக்கிய 3 மணி நேரத்தில் மீண்டும் தடை!

Meenakshi
May 24, 2024,01:15 PM IST

தென்காசி: குற்றாலம் அருவி பகுதிகளில்  மழையின் அளவு குறைந்துள்ளதால் 7 நாட்களுக்கு பின்னர் இன்று காலை குளிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், 3 மணி நேரத்தில் மீண்டும் தடை விதிக்கப்பட்டது.


கடந்த மே 17ம் தேதி பழைய குற்றால அருவியில் திடீர் என வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். வெள்ளத்தில் சிக்கி 17 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தையடுத்து குற்றால அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. 




இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் குற்றால அருவியில் குளிப்பதற்கான தடைகளை விலக்கிக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது.  மேலும், குற்றால அருவியில் குளிப்பதற்கு பல்வேறு கட்டப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படிபழைய குற்றால அருவியில் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே நீராட அனுமதி வழங்கப்படும். பழைய குற்றால பகுதியில் வாகன நிறுத்தத்திற்கான அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகன நிறுத்தப்பட வேண்டும். 


ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி ஆகிய அருவிகளில் நீராடுவதற்கான தடை உடனடியாக விலக்கிக் கொள்ளப்படுகிறது. அணைக்கட்டு பகுதிகளில் நீராட தடை தொடர்ந்து நீடிக்கிறது. சுற்றுலா பயணிகள் குற்றாலம் அறிவிப்பகுதிகளில் நீராடச் செல்லும்போது பிரதான அருவி உட்பட அனைத்து அருவிகளிலும் சோப்பு, ஷாம்பு, எண்ணெய் பயன்படுத்தக் கூடாது. அருவிப் பகுதியில் உட்பட அனைத்து பகுதிகளிலும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கேரி பேக் பயன்படுத்த அனுமதி இல்லை. 


குடிபோதையில் எவரும் அருவிப்பகுதியில் நீராட அனுமதி இல்லை. காவல்துறை மூலம் தெரிவிக்கப்படும் அறிவிப்புகளை பொதுமக்கள் கடைபிடிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. குற்றால அறிவிப்பகுதியில்  நீராட வழங்கப்பட்டுள்ள அனுமதி சென்னை வானிலை மைய அறிவிப்பு மற்றும் கனமழை பொறுத்து அவ்வப்போது மாறுதல் செய்யப்படும் என்று கூறப்பட்டது.


இந்நிலையில், சென்னை வானிலை மைய அறிவிப்பில் மிக கனமழை எச்சரிக்கை ஏதும் இல்லாததால் கடந்த 7 நாட்களாக விதிக்கப்பட்ட தடை இன்று காலை நீக்கப்பட்டது. இந்நிலையில், சுற்றுலா பகுதிகள் மகிழ்ச்சியாக குளித்தனர். ஆனால் தடை விலக்கப்பட்ட 3 மணி நேரத்தில் அருவிகளில் குளிக்க மீண்டும் தடை போடப்பட்டது.