பிறந்த நாளன்று.. கேக் சாப்பிட்ட.. 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி.. பதறிப் போன பஞ்சாப்
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் 10 வயது சிறுமி, பிறந்த நாளன்று கேக் சாப்பிட்ட சிறிது நேரத்தில் பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பாட்டியாலாவில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் வைத்து கேக் வெட்டி சாப்பிட்ட நிலையில், அந்த சிறுமியின் குடும்பத்தினரும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மரணமடைந்த சிறுமியின் பெயர் மான்வி. கடந்த வாரம் இவர் தனது 10வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் வீட்டில் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். இரவு 7 மணிக்கு மான்வி கேக் வெட்டியுள்ளார். அடுத்த சில மணி நேரங்களில் குடும்பத்தினர் அனைவருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது.
மான்வி, அவரது சகோதரி ஆகியோருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. இதில் மான்விக்கு வாயெல்லாம் வறண்டு போய் தண்ணீர் கேட்டு கதறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவர் மயங்கி விட்டார். பதறிப் போன குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
அடுத்த நாள் காலையில், மான்வி மரணமடைந்தார். மற்றவர்களுக்கு ஆபத்து இல்லை. இதுகுறித்து மான்வியின் தாத்தா ஹர்பன் லால் கூறுகையில், கேக் கன்ஹா என்ற பேக்கரியிலிருந்து இந்த கேக்கை வாங்கினோம். அதில் ஏதோ விஷப் பொருள் கலந்திருக்கிறது. அதனால்தான் மான்வியின் உயிர் பறி போய் விட்டது என்று கூறினார்.
இந்த சம்பவம் பாட்டியாலாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட பேக்கரி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. கேக் சாம்பிளை சோதனைக்கு அனுப்பியுள்ளனர். விரிவான அறிக்கைக்காக தற்போது போலீஸார் காத்துள்ளனர்.