தமிழ்நாட்டில்..வெப்பம் அதிகரிக்கும்.. குமரியில் மட்டும் மழை.. தமிழ்நாடு வெதர்மேன்

Manjula Devi
May 28, 2024,10:49 AM IST

சென்னை:   தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும். குறிப்பாக சென்னையில் வெயில் கடுமையாக இருக்கும். வானிலையில் எந்த மாற்றமும் இல்லை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவித்துள்ளார்.


கடந்த இரண்டு வாரங்களாக கோடை மழை பரவலாக கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் அணைகள், நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்தது. கோடை காலத்திலும் நல்ல மழை பெய்ததால் இந்த வருடம் சாகுபடி காலத்தில் தண்ணீருக்கு பஞ்சம் வராது என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வந்தனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் தற்போது மழை அளவு குறைந்து வெயில் தலை தூக்க தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் தகித்து வருகின்றனர்.




வட மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் ஹரியானா ஆகிய மாவட்டங்களில் அதிக வெப்ப அலைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், பஞ்சாப், சட்டீஸ்கர், டெல்லி, உத்தரப்பிரதேசம், ஆகிய மாவட்டங்களில்  வெப்ப அலைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெப்ப அலை நாளை மறுநாள் வரை நீடிக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. 


இதற்கிடையே தமிழ்நாட்டில் வடகடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களில் வெயில் தாக்கம் கடுமையாக இருக்கும். அப்போது வெப்பநிலை 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் மழைக்கு வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


மேலும் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்சமாக நீண்ட நாட்களுக்குப் பிறகு 105 டிகிரி ஃபாரான்ஹீட் வெப்பம் கொளுத்தியது. வேலூரில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், தஞ்சாவூரில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் சுட்டெரித்து. மதுரை மற்றும் கடலூரில் தலா 101 டிகிரி ஃபாரின்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.