"பரதன் என்ற குழந்தையை பாரத தேசமாக பாராட்டினால்.. இந்திய தாய் அகமகிழ்வாள்".. டாக்டர் தமிழிசை

Su.tha Arivalagan
Nov 04, 2023,07:54 PM IST

மதுரை:  ஒரு தாய் தன் குழந்தைகளை பாராட்டினால்  அகமகிழ்ந்து போவார். அதைப்போல, பரதன் என்ற குழந்தையை பாரத தேசமாக பாராட்டினால் இந்திய தாய் இதைவிட அகமகிழ்ந்து போவாள் என்று இந்தியாவுக்கு பாரதம் என்ற பெயரைச் சூட்டுவதற்கு தனது விருப்பத்தை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பை வகிப்பவருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்.


மதுரை எஸ்.எல்.சி.எஸ் கல்லூரியில் இன்று கல்வி மற்றும் கற்பித்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஞானோத்சவ்-23 நிகழ்ச்சி நடைபெற்றது. அதில்,  டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.




நிகழ்ச்சியில் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் ஆற்றிய உரையிலிருந்து:


நன்றாக படித்தவர்கள் வேலை தேடி  வெளிநாடுகளுக்கு சென்று  விடுகிறார்கள்.  ஆனால், 

படித்தவர்கள் அரசியலுக்கு வரும்பொழுது தான் அரசியல் தூய்மையாகும். புதிய கல்விக் கொள்கை  மாணவர்களுடையே ஒரு பெரும் புரட்சி ஏற்படுத்தி  வருகிறது. புதிய கல்விக் கொள்கை அரசியல் நோக்கத்திற்காக விமர்சிக்கப்பட்டு வரும்  சூழலில் இது போன்ற மாநாடு மிகவும் அவசியம்.


சுவாமி விவேகானந்தர் வெளிநாடுகளுக்கு சென்று மீண்டும் இந்தியா வந்தபோது அவரிடம், "வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன்பு இந்த பாரத தேசத்தை விரும்புகிறேன் என்று கூறுவீர்களே இப்போதும் விரும்புகிறீர்களா?" என்று கேட்டதற்கு, "வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன்னர் இந்தியாவை விரும்பினேன். ஆனால், இப்போது இந்தியாவை வணங்குகிறேன்" என்று கூறினார்.





இந்த மண்ணில் வாழ்வதற்கும் மண்ணில் படிப்பதற்கும் நமக்கு மிகப்பெரும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 

கல்வி வேறு; பட்டம் வேறு. நாம் நமது படிப்பினை மக்களுக்கு பயன்பெறும் வகையில் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். உங்களை கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதனை இது போன்ற மாநாடுகள் செய்து கொண்டிருக்கிறது.


இந்த கருத்தரங்கின் மூலம் உங்களது திறன் அதிகரிக்கப்படுகிறது. இந்த கருத்தரங்கு மூலம் இஙகே இருக்கும் மாணவர்களை அதிகப்படியாக தொழில்முனைவோர்களாகவும், மதிப்புமிக்க ஆளுமைகளாகவும்  உருவாக்குவதற்கு மிக அடிப்படையான ஒரு தன்மையை உறுதிப்படுத்துகிறது.


ஒரு தாய் தன் குழந்தைகளை பாராட்டினால்  அகமகிழ்ந்து போவார். அதைப்போல, பரதன் என்ற குழந்தையை பாரத தேசமாக பாராட்டினால் இந்திய தாய் இதைவிட அகமகிழ்ந்து போவாள்.




உங்கள் பெற்றோர்கள் தியாகத்தினால்தான் நீங்கள் இங்கே அமர்ந்து இருக்கிறீர்கள். அவர்களுக்கு நீங்கள் நன்றி சொல்லி உங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.  தினந்தோறும் உங்களை உயர்த்திக் கொள்வது தான் உங்களின் வழக்கமாக இருக்க வேண்டும்.


இன்றைய காலகட்டதில் மிகவும் போட்டி நிறைந்த உலகமாக இருக்கிறது. இந்த நாடு ஒரு பழம்பெரும் நாடு. தேசத்தில் நல்லாட்சி என்றால் செங்கோல் ஆட்சி தான். கோள்கள் அனைத்தும் நமக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காக, சுதந்திர தினத்தன்று கோளறு பதிகம் பாடப்பட்டது. புதிய கல்வி கொள்கையின் நோக்கம் நம் கல்வித் தரத்தை உலக அரங்கிற்கு உயர்த்துவது.


இங்கு படிக்கும் மாணவர்களின் தரத்தை உயர்த்துவதற்காக தான் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. புதிய கல்விக் கொள்கையானது தாய்மொழி வழி கல்வியை  ஊக்கப்படுத்துகிறது.  ஆனால், இது பல அரசியல்வாதிகளால் தவறாக பார்க்கப்படுகிறது. புதிய கல்விக் கொள்கையானது ஒவ்வொரு மாணவரின் வாழ்க்கையில் முக்கிய பங்கு ஆற்றுகிறது. அதோடு ஒரு மாணவர் என்னெல்லாம் நினைக்கிறார்களோ அதை எல்லாம் இந்த கல்வி சொல்லிக் கொடுக்கிறது.


அமெரிக்காவில் ஆறு டாக்டர்களில் ஒருவர் இந்தியராக இருக்கிறார்கள். முன்வரிசை மாணவர்களுக்கு சமமாக பின்வரிசையில் அமர்ந்திருக்கும் மாணவர்களுக்கும் திறமை புதைந்து கிடைக்கிறது.

ஆசிரியர்கள் அவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். அதைப்போல அந்த வாய்ப்புகள் பயன்படுத்தப்பட வேண்டும். எனவே, எல்லா மாணவர்களுக்கும் சமமாக வாய்ப்புகளை வழங்கி அவர்கள் பொதுவெளியில் தங்களை ஆளுமைகளாக நிறுவி கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும்.




சுய சார்பான இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு நாம் ஒருவரின் பங்கும் முக்கியம் என்று அனைவரும் நினைக்க வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். நம் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு நாம் இன்று பெருமையாக நின்று கொண்டிருக்கிறோம். அதற்கு நாம் பாரதப் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம்.


பொதுவாக பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசிகள் மேலை நாடுகளிலிருந்து இந்தியா வந்தடைய பல காலம் ஆகும். ஆனால் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட 11  மாதங்களுக்குள்ளாகவே இந்தியாவில் தயாரிக்கப்பட்டு 150 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது என்றார் தமிழிசை செளந்தரராஜன்.