8 தொகுதிகளில் போட்டியிட்டு.. அத்தனையிலும் தோல்வி அடைந்த பவன் கல்யாண் கட்சி.. அடப் பரிதாபமே!!

Su.tha Arivalagan
Dec 03, 2023,05:59 PM IST

ஹைதராபாத்: தெலங்கானா சட்டசபைத் தேர்தலில் பாஜகவுடன்  கூட்டணி வைத்து 8 தொகுதிகளில் போட்டியிட்டது நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி. ஆனால் எட்டு தொகுதியிலும் அக்கட்சி படு தோல்வியைச் சந்தித்துள்ளது. எல்லாவற்றிலுமே டெபாசிட் தொகையை அக்கட்சி வேட்பாளர்கள் பறி கொடுத்துள்ளனராம்.


ஜன சேனா கட்சி  என்ற பெயரில் அரசியலில் ஈடுபட்டுள்ளார் பவன் கல்யாண். தெலுங்கு ரசிகர்களிடையே மிகவும் பாப்புலரானவர் பவன் கல்யாண். இவருக்கு செல்லமாக பவர் ஸ்டார் என்ற பட்டப் பெயரும் உண்டு. ஆனால் அரசியலில் இவர் தனது அண்ணன் சிரஞ்சீவி போலவே பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளார்.


சிரஞ்சீவியாவது சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு சில தொகுதிகளை வென்றார். ஆனால் பவன் கல்யாண் தெலங்கானா சட்டசபைத் தேர்தலில் பெரும் தோல்வியையே சந்தித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி வைத்து எட்டு தொகுதிகளில் பவன் கல்யாண் கட்சி போட்டியிட்டது. ஆனால் எட்டிலுமே படு தோல்வியே கிடைத்துள்ளது.




தனது கட்சி வேட்பாளர்களுக்காகவும், பாஜக வேட்பாளர்களுக்காகவும் தீவிரமாக வாக்கு வேட்டையாடினார் பவன் கல்யாண். கிட்டத்தட்ட ஒரு வார காலம் அவர் பிரச்சாரம் செய்தார். ஆனால் சுத்தமாக பலன் கிடைக்கவில்லை.


போட்டியிட்ட எட்டு தொகுதிகளில் குகட்பள்ளி என்ற தொகுதியில் மட்டுமே அக்கட்சி 3வது இடத்தைப் பிடித்தது. மற்ற ஏழு தொகுதிகளிலும் அக்கட்சிக்கு அதை விட மோசமான இடமே கிடைத்துள்ளது. இந்தத் தோல்வியின் மூலம் தெலங்கானா அரசியலில் பவன் கல்யாண் கட்சியால் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்பது தெளிவாகியுள்ளது. 


ஆனால் பவன் கல்யாணுடன் கூட்டணி வைத்த பாஜக பரவாயில்லை.  ஜன சேனாவுக்கு ஒதுக்கிய 8 தொகுதிகள் தவிர மீதமிருந்த 111 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது. அதில் 8 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இது அக்கட்சிக்கு தெலங்கானாவில் மிகப் பெரிய வெற்றியாகும். கடந்த 2018 தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே பாஜக வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


சிரஞ்சீவி இப்படித்தான் தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து அரசியலுக்கே முழுக்கு போட்டார். அதே பாணியில் ஜன சேனா கட்சியும் அரசியலை விட்டு விலகுமா.. இல்லை தொடர்ந்து அரசியலில் பவன் கல்யாண் இருப்பாரா.. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.