தெலுங்கானா சட்டசபை தேர்தல்.. விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு.. மக்கள் ஆதரவு யாருக்கு?

Aadmika
Nov 30, 2023,12:47 PM IST

ஹைதராபாத் : தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று (நவம்பர் 30) காலை துவங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் காலையிலேயே ஓட்டுச்சாவடிக்கு குடும்பத்துடன் வந்து ஓட்டளித்து சென்றுள்ளனர்.


தெலுங்கானா சட்டசபையில் உள்ள 119 இடங்களுக்கான ஓட்டுப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. காலை 7 மணிக்கு துவங்கி, மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் அதிகம் உள்ள பகுதிகளில் காலை 7 மணிக்கு துவங்கி மாலை 4 மணியுடன் ஓட்டுப்பதிவை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 


2014 ம் ஆண்டு ஜூன் மாதம் ஆந்திர மாநிலத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டு, தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. அதற்கு பிறகு தெலுங்கானா மாநிலத்தில் 2018 ம் ஆண்டு முதல் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது.  இதில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பிறகு இந்த கட்சி பாரத ராஷ்டிரிய சமிதி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த தேர்தலில் போது 40 முதல் 50 சதவீதம் ஓட்டுக்கள் மட்டுமே பதிவாகி இருந்தன.




ஆளும் பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஆட்சி காலம் 2023 ம் ஆண்டு டிசம்பர் 03 ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் தெலுங்கானா மாநிலத்திற்கு நவம்பர் 30 ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. இன்று பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 03ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் 1.59 கோடி ஆண் வாக்காளர்களும், 1.58 கோடி பெண் வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 2290 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதில் காங்கிரஸ், பாஜக, பாரத ராஷ்டிரிய சமிதி இடையே கடும் போட்டி நிலவுகிறது.


இந்த முறை பொது மக்கள், பிரபலங்கள் என பலரும் காலையிலேயே ஓட்டுச்சாவடிக்கு குடும்பத்துடன் வந்து ஓட்டளித்து வருவதால் கடந்த தேர்தலை விட இம்முறை அதிக அளவிலான ஓட்டுக்கள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கானா சட்டசபை தேர்தலில் மும்முனை போட்டி நிலவினாலும் ஆளும் பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியே வெற்றி பெற்று, சந்திரசேகர ராவ் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதே சமயம் காங்கிரஸ் கட்சி ஆட்சி பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் சில கருத்து கணிப்புகள் தெரிக்கின்றன. பாஜக.,வை பொறுத்த வரை 3வது இடம் கிடைக்கவே அதிக வாய்ப்புள்ளதாக அனைத்து கருத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன.


பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடைபெற்றாலும் ஒரு சில இடங்களில் காங்கிரஸ் - பாஜக மோதல், காங்கிரஸ் - பாரத ராஷ்டிரிய சமிதி கட்சிகள் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. இதனால் மக்கள் ஆதரவு யாருக்கு என தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.