"கமிட்டி போடுங்க.. காங்கிரஸை வெல்ல வையுங்கள்"... தெலங்கானா திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு!

Su.tha Arivalagan
Nov 21, 2023,05:06 PM IST
சென்னை: தெலங்கானா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவதாக திமுக அறிவித்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்குப் பாடுபடுமாறு தெலங்கானா திமுகவினருக்கு கட்சித் தலைமை அழைப்பு விடுத்துள்ளது.

தெலுங்கானா மாநில சட்டசபைக்கு நவம்பர் 30ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. ஒரே கட்டமாக நடைபெற உள்ள இத் தேர்தலில் பிரதான கட்சிகளாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (இப்போது அதன் பெயர் பாரதிய ராஷ்டிரிய சமிதி),  காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக ஆகியவை போட்டியிட உள்ளன.

இதில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தற்போது ஆளுங்கட்சியாக உள்ளது. தெலங்கானா மாநிலம் உருவானத நாள் முதலே இந்தக் கட்சிதான் அங்கு ஆட்சியில் உள்ளது. அசைக்க முடியாத கட்சியாகவும் அது திகழ்கிறது. தெலங்கானா மாநிலப் பிரிவினைக்காக தீவிரமாக போராடிய கட்சி என்பதால் அக்கட்சியை மக்கள் தொடர்ந்து தூக்கிப் பிடித்தபடியே உள்ளனர்.



ஆனால் தற்போது டிஆர்எஸ் ஆட்சி மீது மக்களிடையே லேசான அதிருப்தி தெரியத் தொடங்கியுள்ளது. பல்வேறு புகார்கள் ஆட்சியாளர்கள் மீது உள்ளதாலும், மத்தியில் உள்ள பாஜகவின் அதிகாரத் தாக்கம் சற்றும் அதிகமாகியிருப்பதாலும் டிஆர்எஸ் கட்சிக்கு நெருக்கடி உருவாகியுள்ளது. இருப்பினும் அதைத் தாண்டி, இந்த முறையும்  ஆட்சியைத் தக்க வைக்க அந்தக் கட்சி பெரும் பிரயத்தனங்கள் செய்து வருகிறது. ஆட்சிக்கு எதிரான அலை லேசாக இருந்தாலும் கூட அதைத் தாண்டி ஜெயித்து விட முடியும் என்ற நம்பிக்கையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி உள்ளது.

மறுபக்கம் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கடுமையாக முயன்று வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரசுக்கு சாதகமான அலை வீசுவதாக பலரும் கூறி வருவதால் காங்கிரஸ் கட்சியினர் மிகுந்த நம்பிக்கையுடன் அங்கு தேர்தல் பணிகளை ஆற்றி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்துள்ளனர். இதன் காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு அங்கு நல்ல ஒரு ஆதரவு நிலை காணப்படுகிறது.

காங்கிரஸ் பக்கம் காற்று வீசுவதால், பல முக்கிய தலைவர்களும் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி காங்கிரஸ் பக்கம் வந்துள்ளனர். குறிப்பாக பாஜகவில் முக்கிய தலைவராக திகழ்ந்து வந்த முன்னாள் எம்பி ஆன நடிகை விஜயசாந்தி சமீபத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வந்து சேர்ந்தார். ஏற்கனவே அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் தான். இடையில் பாஜக மற்றும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இருந்தார். தற்போது மீண்டும் தாய்க் கட்சிக்கு திரும்பி வந்துள்ளார்.

இந்த நிலையில் தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.  ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைமைக் கழகத்திலிருந்து ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில், வருகின்ற 2023 தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில்  காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு நாம் பாடுபட வேண்டும். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள திமுகவினர் அனைவரும் ஒருங்கிணைந்து காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக தீவிரமாக உழைக்க வேண்டும். இது தொடர்பாக உடனடியாக தேர்தல் பணி குழு ஒன்றை ஏற்படுத்தி பணிகளை செய்ய வேண்டும். காங்கிரஸ் வெற்றியின் மூலம் இந்தியா கூட்டணியின் வெற்றியை பலப்படுத்துவோம் என்று திமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது.