அரபிக் கடலில் தேஜ் புயல்.. கடலுக்குப் போகாதீங்க.. தமிழ்நாட்டில் 25ம் தேதி கனமழை இருக்காம்!
Oct 21, 2023,11:17 AM IST
சென்னை: அரபிக் கடலில் தேஜ் புயல் உருவாகியுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டுக்கு 3 நாட்களுக்கு கன மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மீனவர்கள் கடலுக்குப் போவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கிழக்கு, மத்திய அரபிக் கடலில் திங்கள் கிழமை காலை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டு அது நேற்று காலை அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது.
இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இதனைத்தொடர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் இது தீவிர புயலாக வலுக்பெறக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் உருவாகியுள்ள புயலுக்கு தேஜ் என பெயரிட்டப்பட்டுள்ளது. தேஜ் என்றால் ஹிந்தியில் வேகம் என்று பொருள். இது இந்தியா வைத்த பெயராகும். இந்த புயலானது தற்போது ஓமன் நோக்கி நகர்கிறது. இது மேலும் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 24ல் தெற்கு ஓமன் மற்றும் அதனை ஒட்டிய ஏமன் கடலோரப் பகுதிகளை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இப்பகுதிகளில் கனமானது முதல் மிக கனமான மழை பெய்யக்கூடும். அரபிக்கடலின் மத்திய மேற்கு பகுதி மற்றும் தென் மேற்கு பகுதிகளில் மணிக்கு 95 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். இதன் காரணமாக வருகின்ற 24ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது.