நடிகர் கார்த்தி மற்றும் எஸ்.ஜே சூர்யா காம்போவில்.. சர்தார் 2 டீசர் வெளியீடு.. ரசிகர்கள் வரவேற்பு!
சென்னை: நடிகர் கார்த்தி மற்றும் எஸ்.ஜே சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள சர்தார் 2 திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.
இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் சர்தார் திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது. உளவாளியாக கார்த்தியின் மிரட்டலான நடிப்பில் இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆதரவை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக பொருட்செலவில் உருவாகியுள்ளது சர்தார் 2 திரைப்படம். இதில் நடிகர் கார்த்தி மற்றும் எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவருடன் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், ஆகியோர் நடித்துள்ளனர். சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இப்படத்தின் கதைக்களம் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வந்தது.
இந்த நிலையில் இன்று சர்தார் 2 படத்தின் டீஸரை பட குழு வெளியிட்டுள்ளது. இந்தியா-சீனா இடையே உளவுத்துறை கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள இந்த டீசரில் கார்த்தி சண்டை போடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் எஸ்.ஜே. சூர்யா இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
சர்தார் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலையில் தான் வெளியாகி ரசிகர்களை குஷி ஆக்கியுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ப்ரைஸாக கார்த்தி மற்றும் எஸ். ஜே. சூர்யா இடம்பெற்றுள்ள சர்தார்2 படத்தின் டீசர் ரிலீஸ் ஆகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.