அதெல்லாம் வதந்திங்க.. கண்டிப்பாக மக்களவை தேர்தலில் போட்டியிடுவோம்.. "இலை" கிடைக்கும்.. ஒபிஎஸ் உறுதி

Meenakshi
Mar 15, 2024,07:51 PM IST

சென்னை: சென்னை: மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி  அமைத்து போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறோம். தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வெளியாகும் தகவல்கள் வதந்தி அவற்றை நம்ப வேண்டாம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.


வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுடன் இணைந்து போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தார் ஓபிஎஸ். அதற்கான பேச்சு வார்த்தைகளில் பாஜகவும் ஓபிஎஸ்சும் ஈடுபட்டு வந்தனர். ஓபிஎஸ் தரப்பில் முதலில் 15 தொகுதிகள் கொண்ட லிஸ்ட் கொடுக்கப்பட்டதாகவும், பின்னர்  6 தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு பாஜக 4 தொகுதிகள் ஒதுக்கியதாகவும் கூறப்பட்டு வந்தது.


பாஜகவில் சரத்குமார் முழுமையாக கட்சியை இணைத்தது போல் ஓபிஎஸ்சும் தனது அணியை இணைத்து விடுவார் என்றும் சொல்லப்பட்டு வந்தது. அதற்கு ஏற்றார் போல் பாஜகவுடன் ஓபிஎஸ்சும் தொடர்ந்து சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். நேற்று இரவு வரை இந்த பேச்சு வார்த்தை தான் நடைபெற்று வந்தது.




இந்நிலையில் திடீர் என ஓபிஎஸ் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்றும், பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை  இலை சின்னத்தில் தான் போட்டி இடுவேன் என்று கூறிவந்த ஓபிஎஸ்சை தாமரையில் போட்டியிட பாஜக நிர்பந்தித்ததால் தான் ஓபிஎஸ்சின் இந்த முடிவுக்கு காரணம் என்றும் கூறப்பட்டது.


மேலும் தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் அதிமுகவுக்கு உரிமை கோர முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இந்த செய்திகளை மறுத்துள்ளார் ஓ.பி.எஸ். இதுகுறித்து அவர் கூறுகையில், மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி  அமைத்து போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறோம். இரட்டை இலை சின்னத்தைப்  பெற தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வெளியாகும் தகவல்கள் வதந்தி அவற்றை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.