ஆசிரியர்களுக்கு ரோஜாப் பூ.. கவிதை, ஓவியப் போட்டி.. கலக்கிய தேவகோட்டை பள்ளி மாணவர்கள்!

Manjula Devi
Sep 05, 2024,05:41 PM IST

சிவகங்கை: தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.


கல்வி வளர்ச்சியில் சிறப்பான பங்களிப்பை ஆற்றியவர் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். இவரை கௌரவிக்கும் வகையில் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. கல்வியின் தரத்தை உயர்த்துவது மட்டுமல்லாமல் மாணவர்களின் வாழ்க்கையின் தரத்தையும் உயர்த்துவதற்காக தங்களின் பங்களிப்பை வழங்கி வருபவர்கள் ஆசிரியர்கள். 




இந்த நிலையில் ஆசிரியர்கள், பேராசிரியர்களை கௌரவிக்கும் வகையில் தற்போது அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் தின விழா மிக  சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா இன்று (செப்டம்பர் 5ஆம் தேதி) கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஆனந்தா கல்லூரியின் முதல்வர் ஜான் வசந்தகுமார் கலந்து கொண்டார். இவரை ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். 


அப்போது சிறப்பு விருந்தினர் கல்லூரி முதல்வர் ஜான் வசந்தகுமார் மாணவர்களிடமும் பேசுகையில், ஆசிரியர் என்பவர் விதை . ஆசிரியர்கள் விதையாக இருந்து தொடர்ந்து வளர்ந்து, வளர்த்து கொண்டே இருப்பார்கள். விதைத்தவன் கூட  தூங்கப் போய் விடுவான். ஆனால் விதை தூங்குவதில்லை. அதுபோன்று ஆசிரியர்கள் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் தொடர்ந்து நற்செயல்களை ஏற்படுத்த தூங்காமல் தொடர்ந்து விதைத்து கொண்டும், செயல்படுத்திக் கொண்டும் இருப்பார்கள். 




உங்களது தாயும், தந்தையும் உங்களுக்கு முதல் ஆசிரியர்கள். அவர்கள்தான் பள்ளியில் உங்களை ஒப்படைக்கின்றனர். கடலுக்கு எப்படி எல்லை இல்லையோ அது போன்று ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான உறவு எல்லை இல்லாதது. ஆசிரியர்கள் எப்பொழுதுமே மாணவர்களின் நன்மையையே நினைத்துக் கொண்டு இருப்பவர்கள்.மாணவர்களாகிய நீங்கள் தனிமையாக இருந்து விடாமல் தொடர் முயற்சி உடையவர்களாகவும், பல  நபர்களுக்கு உதவி செய்பவர்களாகவும் இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன். ஆசிரியர்களை வாழ்வில் எப்பொழுதுமே மறக்காதீர்கள். தினந்தோறும் ஆசிரியர்களை கொண்டாடுங்கள் என கூறியுள்ளார்.


இதனைத் தொடர்ந்து ஆசிரியர் தினம் குறித்து பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். அப்போது ஆசிரியர் தின சிறப்பு கவிதைக்காக மாணவிகள் கனிஷ்கா மற்றும் நந்தனாவுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதேபோல் சிறப்பான ஓவியம் வரைந்த சாதனா ஸ்ரீ மற்றும் சுபிக்ஷன் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதன் பின்னர் மாணவர்கள் அனைவரும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வ ரோஜா பூ கொடுத்து ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். விழாவின் இறுதியில் ஆசிரியர் ஸ்ரீதர் அனைவருக்கும் நன்றி கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்