இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள்ள.. ஆட்சிக்கு ஆதரவு தர நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு வைக்கும் நிபந்தனைகள்
டெல்லி : மத்தியில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதற்கு தாங்கள் ஆதரவு அளிக்கப் போவதாக நிதிஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும் கூறி விட்டார்கள். அதோடு பாஜக.,விற்கு சில முக்கிய நிபந்தனைகளையும் அவர்கள் விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் 2024 ல் பாஜக கூட்டணி 291 இடங்களிலும், இந்தியா கூட்டணி 239 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக.,விற்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடனேயே ஆட்சி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயம் மற்ற கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைக்க இந்தியா கூட்டணிக்கும் வாய்ப்பு உள்ளதால், அது பற்றி இறுதி முடிவு எடுப்பதற்காக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று டில்லியில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதன் முடிவுகள் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளது.
இந்த முறை மத்தியில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் கிங் மேக்கர்களாக ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரான நிதிஷ்குமாரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவரான சந்திரபாபு நாயுடுவும் உள்ளனர். இவர்கள் இந்தியா கூட்டணிக்கு திரும்பினால் பாஜக.,வால் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்படும் என்ற குழப்பமான நிலை இருந்து வந்தது. ஆனால் தாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய ஆதரிக்கப் போவதாக இருவரும் கூறி விட்டனர். பிரதமர் மோடியும், தனது பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தையும், தனது தலைமையிலான மத்திய அமைச்சரவையை கலைப்பதற்கான கடிதத்தையும் ஜனாதிபதியிடம் அளித்துள்ளார்.
ஜூன் 08ம் தேதி நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்பதற்காக ஏற்பாடுகள் துவங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கையோடு, முக்கிய நிபந்தனைகள் சிலவற்றை சந்திரபாபு நாயுடு முன் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முக்கியப் பதவிகளுக்கு நாயுடு குறி:
அதாவது, ஏற்கனவே வாஜ்பாய் ஆட்சி காலத்தின் போது கூட்டணியில் இருந்த தெலுங்கு தேச கட்சி லோக்சபா சபாநாயகர் பதவியை கேட்டு பெற்றது. ஜிஎம்சி பாலயோகி சபாநாயகராக இருந்தார். அதே போல் இந்த முறையும் சபாநாயகர் பதவியை தங்கள் கட்சிக்கு வழங்கும் படி சந்திரபாபு நாயுடு கேட்டு வருகிறாராம். அது மட்டுமல்ல நிதித்துறை, தகவல் தொடர்பு துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் அமைச்சர் பதவிகளையும் தெலுங்கு தேசம் கட்சி கேட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர் இப்படிக் கேட்டால் அவர் விடுவாரா.. சும்மாதான் இருப்பாரா.. அதான் நம்ம நிதீஷ் குமார். அவரும் பாஜக.,விற்கு ஆதரவு தர சில நிபந்தனைகளை விதித்து வருவதாக சொல்லப்படுகிறது. நிதிஷ்குமாரும் முக்கிய துறைகள் சிலவற்றை தங்களுக்கு தர வேண்டும் என கேட்டு வருகிறாராம். அதோடு ஏற்கனவே அவர் ரயில்வே அமைச்சராக இருந்த அனுபவம் மிக்கவர் என்பதால் இந்த முறை ரயில்வே துறையை அவர் கேட்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
பிரதமர் பதவிக்காக தான் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியதால் பாஜக.,விடம் துணை பிரதமர் பதவியை நிதிஷ்குமார் கேட்பதற்கும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
கூட்டணி ஆட்சி என்று வந்தாலே இந்த பஞ்சாயத்தெல்லாம் பின்னாடியே வரும். இது பாஜகவுக்குத் தெரிந்ததுதான். வாஜ்பாயே கூட கூட்டணி ஆட்சியைத்தான் நடத்தினார். அந்த நிலைக்கே மீண்டும் இப்போது பாஜக திரும்பியுள்ளதால், கடந்த கால அனுபவத்தைக் கொண்டும், நிகழ்கால சூழலை கருத்தில் கொண்டும் சமயோசிதமாக பாஜக செயல்படும் என்று எதிர்பார்க்கலாம்.