250 ஏர்பஸ்.. 220 போயிங் விமானங்களை வாங்கும் ஏர் இந்தியா.. டாடாவின் அதிரடி டீல்..!
Feb 15, 2023,09:41 AM IST
டெல்லி: டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் அதிரடி விமான கொள்முதல் ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தங்களின்படி 250 ஏர் பஸ் விமானங்களை பிரான்சிலிருந்தும், 220 போயிங் விமானங்களை அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திலிருந்தும் வாங்கவுள்ளது. மொத்தமாக 470 பயணிகள் விமானத்தை ஏர் இந்தியா வாங்குகிறது. இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து வரலாற்றிலேயே இதுதான் மிகப் பெரிய விமான கொள்முதல் ஆகும்.
கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் மத்திய அரசிடமிருந்து வாங்கியது. அதன் பிறகு தற்போது தனது விமான சேவையை பிரமாண்டமாக்கும் வகையில் இந்த அதிரடி விமானக் கொள்முதலை ஏர் இந்தியா மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஒரு அறிக்கையில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பிடன் கூறுகையில், 200க்கும் மேற்பட்ட அமெரிக்க விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் வாங்குவது மிகப் பெரிய வரலாற்று மைல்கல் ஆகும். இதன் மூலம் அமெரிக்காவின் 44 மாநிலங்களைச் சேர்ந்த பத்து லட்சம் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று கூறியுள்ளார் பிடன்.
இதுதவிர மேலும் 70 போயிங் விமானங்களை எதிர்காலத்தில் ஏர் இந்தியா வாங்கும் வாய்ப்பும் உள்ளது. மொத்தமாக 100 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் இது. ஏர் இந்தியா மிகப் பெரிய அளவில் விமானங்களை வாங்குவது குறித்து ஏர்பஸ் நிறுவனமும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
இந்த விமானக் கொள்முதல் தொடர்பான ஒப்பந்தம் தொடர்பான வீடியோ கான்பரன்ஸ் அழைப்பில் பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர் ரத்தன் டாடா, டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ஏர்பஸ் தலைவர் கில்லாமே பாரி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆகியோர் கலந்து கொண்டனர்.