அன்று என்னை வங்கதேசத்தை வீட்டு தூக்கி எறிந்தார்.. இன்று.. ஷேக் ஹசீனா குறித்து தஸ்லிமா நஸ்ரின்!

Su.tha Arivalagan
Aug 06, 2024,06:27 PM IST

டெல்லி: இஸ்லாமிய ஜிஹாதிகள் என்னை அன்று எனக்கு எதிராக திரண்டபோது அவர்களை ஆதரிக்கும் வகையில் அவர்களை அமைதிப்படுத்தும் வகையில் என்னை நாட்டை விட்டு தூக்கி எறிந்தார் ஷேக் ஹசீனா.. இன்று அதே ஜிஹாதிகளின் ஆதரவுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இயக்கங்களால் அவரே நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவரது இன்றைய நிலைக்கு அவர்தான் காரணம் என்று கூறியுள்ளார் வங்கதேசத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்.


வங்கதேசத்தைச் சேர்ந்தவர் தஸ்லிமா நஸ்ரின். சிறந்த எழுத்தாளர். டாக்டரான அவர் எழுதிய லஜ்ஜா என்ற நூலில், இஸ்லாமிய மூட நம்பிக்கைகளை கடுமையாக சாடியிருந்தார். முஸ்லீம் பெண்களின் அவல லையையும் அவர் வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தார். இது பெரும் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதையடுத்து அந்தப் புத்தகத்தை வங்கதேச அரசு தடை செய்தது. அவருக்கு எதிராக இஸ்லாமிய மத குருமார்கள் பாத்வா விதித்தனர். நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து தஸ்லிமா நஸ்ரின் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். 1994ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்தது. அப்போது கலிதா ஜியா பிரதமராக இருந்தார்.




அதன் பின்னர் 1999ம் ஆண்டு உடல்நலமின்றி இருந்த தனது தாயாரைப் பார்ப்பதற்காக தஸ்லிமா டாக்காவுக்கு வந்தபோது அவரை விமான நிலையத்தோடு நிறுத்தி திருப்பி அனுப்பியது வங்கதேச அரசு. அப்போது பிரதமராக இருந்தவர் ஷேக் ஹசீனா. இஸ்லாமிய அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்குப் பணிந்து தஸ்லிமாவை திருப்பி அனுப்பினார் ஷேக் ஹசீனா. அது முதல் தஸ்லிமா வங்கதேசத்துக்குள் நுழைய முடியாமல் உள்ளார்.

 

இந்த நிலையில் ஷேக் ஹசீனாவுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து தஸ்லிமா கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,  எந்த இஸ்லாமிய ஜிஹாதிகளுக்கு ஆதரவாக என்னை வெளியேற்றினாரோ இன்று அதே ஜிஹாதிகளின் ஆதரவு பெற்ற மாணவர் அமைப்புகளால் நாட்டை விட்டே வெளியேறியுள்ளார் ஷேக் ஹசீனா. என்ன ஒரு கொடுமை பாருங்கள்.


எனது தாயார் மரணப் படுக்கையில் இருந்தபோது அவரைப் பார்க்க நான் வந்தேன். ஆனால் ஈவு இரக்கமே இல்லாமல் என்னை நாட்டு விட்டு வெளியேற்றினார் ஹசீனா. இன்று அவரையே வெளியேற்றி விட்டனர். இஸ்லாமிய மத வெறியர்களை வளர விட்டது இவர்தான். இவரால்தான் இன்று நாட்டில் மத வெறி அதிகரித்து விட்டது. தன்னுடன் இருந்தவர்களையெல்லாம் ஊழல் செய்ய அனுமதித்தார். 

ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைத்தார். இன்றைய அவரது நிலைக்கு அவரேதான் காரணம்.


வங்கதேசம் இன்னொரு பாகிஸ்தான் ஆகி விடக் கூடாது. அங்கு ராணுவம் ஆட்சியில் இருக்கக் கூடாது. ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டும். அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும் பாதுகாக்க வேண்டும் என்று தஸ்லிமா கூறியுள்ளார்.