ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதி, சட்டம் ஒழுங்கு பிரச்சினை.. ஆளுநரிடம் தவெக தலைவர் விஜய் நேரில் மனு
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று மதியம் ஆளுநர் ஆர். என். ரவியைச் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அனைத்துக் கட்சித் தலைவர்களும் கடுமையாக கண்டித்தனர். அதேசமயம், அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் டிசம்பர் 23 ஆம் தேதி மாணவி ஒருவர், மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர், தனது நண்பரை அங்கிருந்து விரட்டிவிட்டு, தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக மாணவி அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியாகி அதுவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
விஜய் வெளியிட்ட கையெழுத்து அறிக்கை
இந்த சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தனது கைப்பட ஒரு கடிதத்தை வெளியிட்டார். அதில், அன்பு தங்கைகளே, கல்வி வளாகம் முதற்கொண்டு ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், என் அருமை தங்கைகள், பெண் குழந்தைகள், என அனைத்து தரப்பு பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளை கண்டு உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன்.
யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது நம்மை யாரும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்த பயனும் இல்லை என்பது தெரிந்ததே அதற்காகவே இக்கடிதம் எல்லா சூழ்நிலைகளிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் அண்ணனாகவும் அறனாகவும். எனவே எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள் பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம். அதற்கான உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம் என கூறியுள்ளார்.
ஆளுநருடன் சந்திப்பு
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் மதியம் ஒரு மணிக்கு ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்தார். இதுதொடர்பாக அக்கட்சி சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இன்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் அவர்கள் தலைமையில் ஆளுநர் ஆர். என். ரவி அவர்களை சந்தித்து மனு அளித்தோம். எங்கள் மனுவில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றும் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.
மேலும் தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவ மழை மற்றும் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என்று மனுவில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எங்கள் கோரிக்கைகளை கேட்டு ஆளுநர் அவற்றை பரிசீலிப்பதாக கூறினார் என்று கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோரும் உடன் இருந்தனர். அரசியல் கட்சி ஆரம்பித்த பின்னர் விஜய் ஆளுநர் மாளிகைக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்