The Real GOAT.. Goundamani: "நான் ரொம்ப பிசி.. காந்தக் கண்ணழகி.. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா"

Su.tha Arivalagan
May 25, 2024,04:34 PM IST

- பொன் லட்சுமி


நக்கல் மன்னன், கவுன்டர் மகான், நகைச்சுவை அரசன்.. இப்படி பற்பல பெயர்களால் அழைக்கப்பட்டு கொண்டாடப்படும் நம்ம காமெடி கிங் கவுண்டமணி இன்று தனது 85வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவர் என்னவோ சத்தம் போடாமல் அமைதியாகத்தான் கொண்டாடிார் என்றாலும் கூட ஒட்டுமொத்த தமிழரக்ளும் செம ஜாலியாக கவுண்டமணியை செலபரேட் செய்து கொண்டுள்ளனர்.


தமிழ் சினிமாவில் எவ்வளவு காமெடி நடிகர்கள் வந்தாலும் சரி தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து இருப்பவர்கள் ஒரு சிலர்தான். அந்த வரிசையில் காமெடியில் ஜாம்பவானாக  அன்றிலிருந்து இன்று வரை காமெடி என்று சொன்னாலே அது கவுண்டமணி தான் என்று சொல்லும் அளவிற்கு அவரது நக்கல் கலந்த காமெடியும், டைமிங்கில் அவர் பேசும் காமெடியும் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது.




எவ்வளவு கவலையாக இருந்தாலும் அவர் காமெடியை பார்க்கும்போது அந்த  கவலைக்கு அப்படியே துடைத்துப் போட்டு விடும் அபார சக்தி கவுண்மணியின் நகைச்சுவைக்கு உண்டு.  புண்பட்ட மனதுக்கு அற்புத டானிக்காக இருக்கும். அந்த அளவிற்கு அவர் பேசும் வசனங்களும், அவரது பாடி லாங்குவேஜும், அந்த டைமிங்கும், அசகாய  நக்கலும் ஒரே அதிரடிதான்.


தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனது காமெடியால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை  அனைத்து தரப்பு வயதினரையும் நாள்தோறும் சிரிக்க வைக்கும் மகானாக இருப்பவர் கவுண்டமணி. நாடக கலைஞராக இருந்து பின்னர் சினிமாவில் முக்கிய நடிகராக உருவெடுத்தவர்  தான் கவுண்டமணி. காமெடியில் மட்டுமில்லாமல் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என அனைத்து வேடங்களிலும் தனது அற்புத நடிப்பாலும்,  டைமிங்கில் கவுண்டர் கொடுத்து கலாய்ப்பதிலும்  முத்திரை பதித்தவராக இருந்து வருகிறார்.




ஆரம்ப காலத்தில் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் அவர் காமெடிக்கு எந்த பஞ்சமும் இல்லை அப்படி இருந்தும்  அந்தப் படங்கள் அவருக்கு சரியான வரவேற்பை கொடுக்கவில்லை.  சரி நம்மை ஜனங்க சிரிக்க வைக்க மட்டுமே அங்கீகரிக்கிறாங்க.. அந்த வேலையை மட்டும் பார்ப்போம் என்று புரிந்து கொண்டு முழுமையாக காமெடியில் பின்னிப் பெடலெடுத்தார். காமெடியில் ஜாம்பவானாக உருவெடுத்தார். 


அவர் தனியாக நடித்த காமெடி ஆகட்டும் செந்திலுடன் சேர்ந்து நடித்த காமெடி ஆகட்டும் இரண்டுமே பட்டைய கிளப்பும் காமெடியாக தான் இருக்கும். 80களில் கவுண்டமணி செந்தில் இணைந்து நடிக்காத படங்களே இல்லை எனும் அளவிற்கு அவ்வளவு பிஸியாக இருந்தார்கள். 

அதேபோல தன்னுடைய படங்களில் தன்னுடன் நடிக்கும் காமெடி நடிகரை மட்டுமல்லாது அந்த படத்தின் ஹீரோவையே கலாய்க்கும் திறமை இவருக்கு அதிகம். காமெடின்னு வந்துட்டா  பாரபட்சம் பார்க்காமல் யாராக இருந்தாலும் துணிச்சலாக நக்கல், நய்யாண்டி செய்யும் காமெடியனாக தன்னை முன்னிருத்தியவர் கவுண்டமணி.  அதனாலேயே இவரை ரசிகர்கள்  காமெடி கிங் நக்கல் மன்னன்  என்று   அழைக்கிறார்கள்.




தமிழ் சினிமாவின் அனைத்து டாப் ஹீரோக்களுடனும் இணைந்து நடித்துள்ளார். அன்றைய டாப் நடிகர்கள் ரஜினி கமல் முதல் இன்றைய இளம் டாப் அஜித் விஜய் சிம்பு என்ற இன்றைய தலைமுறை  நடிகர்கள் வரை அனைவருடனும் நடித்து விட்டார். அனைவரையும் சகட்டு மேனிக்கு கலாய்ப்பதும், நக்கல் அடிப்பதுமாக அவர் இருக்கும் இடமே அவ்வளவு கலகலப்பாக இருக்கும். சினிமாக்களில் ஹீரோவை நக்கலடித்து ஜனங்களை சிரிக்க வைத்த காமெடியன் என்ற பெருமை அது கவுண்டமணியை சாரும். அதை விட முக்கியமாக இவர் பேசும் வசனங்களை மக்கள் விவாதமே இல்லாமல் ஏற்றுக் கொள்வார்கள். சமூகக் கருத்துக்களை பொட்டில் அடித்தாற் போல இவர் சொல்வதை மக்கள் அப்படியே ஏற்றார்கள். அதை விமர்சிக்கும் மனசு யாருக்குமே வந்ததில்லை. காரணம், கவுண்டர் சொன்னா சரியாத்தாம்பா இருக்கும் என்று மக்கள் அவர் மீது வைத்த பிரியம்தான்.


கவுண்டமணியுடன் இணைந்து நடித்தால்  நம்முடைய திறமை வெளியே தெரியாது என்று  பயந்தே  அவரை தங்களுடைய படங்களில் ஒப்பந்தம் செய்யாமல்  கழட்டிவிட்ட  பல நடிகர்கள்  உள்ளார்கள். அவர்கள் நினைத்தது நிஜம் என்பதை நிரூபிப்பது போலவே படங்களில் அவர் வரும் சீன் வந்தால் போதும் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். அந்த அளவுக்கு அவரின் காமெடி கலக்கலாக இருக்கும், தூக்கலாக இருக்கும். கவுண்டமணி காமெடி இன்று நிலைத்து நிற்பதற்கு காரணம் அவருடைய பாடி லாங்குவேஜ்ஜூம், அவரின் டைமிங் நக்கலும் தான். நாட்டு நடப்பை புட்டு புட்டு வைக்கும் விதமாக சில காமெடிகள் அதுவும் அவரின் ஸ்டைலில் வரும்போது அவ்வளவு கலகலப்பாக இருக்கும்.மூட நம்பிக்கைகளை கிண்டல் செய்வதிலும் சரி, வில்லனை டம்மியாக்குவதில்  சரி என்றுமே அவரது நகைச்சுவை ட்ரேட் மார்க் தான்.




அவரது பல வசனங்கள் மிகப் பிரபலமானவை..  சூரியன் படத்தில் வரும் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்னும் வசனம், சூரியனை யாரு சுட்டா  எனும் கேள்விக்கு சூரியனை யாரும் சுட முடியாது சூரிய வெப்பம் தான் நம்மள சுடும் அப்படின்னு போலீஸ்காரரையே கலாய்ச்சிருப்பாரு. அதே படத்தில் ஆ ரைட்ல பூசு ஆ லெப்ட்ல பூசு என்று பேசும் வசனம், வைதேகி காத்திருந்தால் படத்தில் வரும் பெட்டர்மாஸ் லைட்டே தான் வேணுமா , சின்ன கவுண்டர் படத்தில் வரும் ஆத்தா வாய மூடு ஆத்தா குழந்தை  பயப்படுறான்..  இன்னும் எவ்வளவோ காமெடிகளை சொல்லிக் கொண்டே போகலாம். 


காமெடியில் மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடத்திலும் சரி, வில்லத்தனமான நடிப்பிலும் சரி அவரின்  நடிப்பை அடிப்பதற்கு ஆளே இல்லை என்று கூறலாம். சில படங்களில் வில்லத்தனத்திலும் வெளுத்துத வாங்கியிருப்பார் கவுண்டமணி. இவருக்கு  சாந்தி என்ற மனைவியும் செல்வி, சுமித்ரா என்ற இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள். பேரப் பிள்ளைகளுடன் இப்போது ஜாலியாக குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக கழித்து வரும் கவுண்டமணி, சினிமாவில் எட்ட முடியாத தூரத்தை பெற்றிருந்தாலும் அவரைப் பொறுத்தவரை  அவருக்கு சினிமா வாழ்க்கை  வேறு, குடும்ப வாழ்க்கை வேறு என்று தான் இருக்கிறார். அதனால்தான் இன்று வரையிலும் தன்னுடைய குடும்பத்தை மீடியாவில் காட்டாமல் இருக்கிறார். சினிமாவில் எவ்வளவு நகைச்சுவையோடு பேசுகிறாரோ அதேபோல நிஜத்தில் யாருக்கும் பயப்படாமல் மனதில் பட்டதை ஓபனாக பேசி விடுவார்.


நம்மை இவ்வளவு நாளும்  கவலைகளை மறந்து சிரிக்க வைத்த இன்னும் சிரிக்க வைக்கும் கவுண்டமணி நீண்ட ஆயுளோடும் நீண்ட  ஆரோக்கியத்தோடும் வாழ வேண்டும் என்று அவரின் ரசிகர்களும்,  பிரபல நடிகர்களும்  வாழ்த்துக்களை  தெரிவித்து வருகிறார்கள்.