சென்னையில் ரம்மியமான சூழல்.. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில்.. 2 வாரம் கன மழை.. தமிழ்நாடு வெதர்மேன்

Manjula Devi
Jul 19, 2024,05:33 PM IST

சென்னை:   காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் இன்னும் 10 முதல் 14 நாட்களுக்கு கனமழை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததை தொடர்ந்து தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா மற்றும் கர்நாடகாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் நீர் பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. குறிப்பாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று 40 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் இன்று நீர்வரத்து 45 ஆயிரம் கன அடியாக  அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 


காவிரி ஆற்றில் நாளுக்கு நாள் நீரின் வரத்து அதிகரிப்பதால் நீர் வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதனால் ஒகேனக்கலில் நான்காவது நாளாக பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.




இந்த நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஏற்கனவே நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்  கூறியதாவது, 


காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் இன்னும் 10 முதல் 14 நாட்களுக்கு வரை மழை தொடர வாய்ப்புள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தொடர வாய்ப்புள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். குறிப்பாக தல காவிரியில் இன்று 23 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கேஆர்எஸ் அணை ஓரிரு நாட்களில் திறக்கப்படும் என்று தெரிகிறது. அடுத்த வாரத்திறகுள் கர்நாடகத்தின் காவிரி அணைகளிலிருந்து விநாடிக்கு 1 லட்சம் கன அடி நீர் வரை திறக்கப்பட வாய்ப்புள்ளது.


நீலகிரியில் மழை தொடரும்


நீலகிரியில் கன மழை தொடரும். குறிப்பாக அவலாஞ்சி, பந்தலூர், தேவலா, போர்த்திமுண்டு, அப்பர் பவானி, பார்சன் வேலி, வால்பாறை ஆகிய பகுதிகளில் கன மழை பெய்யும்.


காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் மழை இருக்கும். தொடர்ந்து ரம்மியமான சூழல் சென்னை மற்றும் அருகாமை மாவட்டங்களில் நிலவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.