'அம்மா' என்றால் அதிமுக.. என்றும் நினைவுகளில்.. நீங்கா இடம் பிடித்த ஜெயலலிதா..!
- மஞ்சுளா தேவி
சென்னை: மங்கையராய் பிறந்திடவே ..நல்ல மாதவம் செய்திட வேண்டும்..என்ற கூற்றுக்கிணங்க ,
நாட்டின் பேசு பொருளாய் பல காலம் திகழ்ந்தவர் ஜெயலலிதா.
சிறந்த நடிகை, எழுத்தாளர், பாடகி, நாட்டிய தாரகை, அரசியல்வாதி என பன்முக திறமைகளைக் கொண்ட சிறந்த பெண் கலைஞர். இன்று டிசம்பர் 5ஆம் நாள் அவர் மறைந்த தினம்.
1948 இல் கர்நாடக மாநிலம்
மேலுகோட்டையில் ஜெயராம் மற்றும் வேதவள்ளி தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர் ஜெயலலிதா. இவர் ஒரு புத்தகப் பிரியை. தனக்கு பிறந்தநாள் பரிசாக புத்தகம் கொடுத்தால் போதும் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று கூறுவார் ஜெயலலிதா. இவர் 1961 ஆம் ஆண்டு குழந்தை பருவத்தில் கன்னட திரைப்படமான ஸ்ரீசைலா மகாத்மா என்ற திரைப்படத்தில் ஒரு நடிகையாக தனது திரை வாழ்க்கையை துவங்கினார். தமிழில் 1965இல் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். பின்னர் தமிழ்த் திரையுலகில் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி காலுன்ற ஆரம்பித்தார்.
அக்காலத்தில் முன்னணி நடிகர்களான
எம் ஜி ஆர் உடன் 28 படத்திலும், சிவாஜி கணேசன் உடன் 17 படங்களிலும் நடித்துள்ளார். தனது திறமையால் பல்வேறு விருதுகளை பெற்று சாதனை நிகழ்த்தி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், என பல்வேறு மொழிகளில் ஒரு நடிகையாக தனது நடிப்பு மற்றும் நடனத்திற்காக பாராட்டுகளை பெற்றவர்.
சில வருடங்களுக்குப் பிறகு நடிகர் எம்.ஜி.ஆர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் தலைவர் ஆனார். இந்த கட்சியில் ஜெயலலிதா இணைந்து ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு அரசியல்வாதியாக தனது அரசியல் வாழ்க்கையை துவங்கினார். பின்னர் 1984 முதல் 1989 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியவர் .
எம்ஜிஆரின் மறைவுக்குப் பின் அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்றார். நீண்ட காலமாக அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்தவர். ஒரு அரசியல்வாதியாக இவருடைய எளிமையான மேடைப் பேச்சுகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 1991 இல் முதன்முதலாக தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இதனைத் தொடர்ந்து 6 முறை தமிழக முதல்வராக பதவி வகித்துள்ளார். இவர் முதல்வராக இருக்கும் போதே சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறை சென்றவர்.
பல சர்ச்சைகள் இருந்தாலும் கூட எம்ஜிஆருக்கு பின் ஒரு சிறந்த தலைவராக ஏழை எளிய மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவரை கட்சி நிர்வாகிகள் மற்றும் இவருடைய ரசிகர்கள் அனைவரும் அம்மா மற்றும் புரட்சித்தலைவி என்றும் செல்லமாக அழைத்தனர் .
இவர் முதலமைச்சராக இருக்கும்போது தான் தொட்டில் குழந்தை என்ற திட்டம் வந்தது. இத் திட்டத்திற்காக ஐநா சபையின் மத்தியில் பாராட்டைப் பெற்ற முதல் இந்தியப் பெண் முதல்வர் இவரே.
2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2016 டிசம்பர் 5ஆம் தேதி மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். இவர் பதவியில் இருக்கும்போது இறந்த முதல் பெண் முதல்வர் ஆவார்.
அதிமுக மட்டும் அல்லாமல் என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஜெயலலிதா. சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு நல்ல ரோல் மாடல். எத்தனை வருடங்கள் கழிந்தாலும் ஜெயலலிதாவின் பேச்சு, நடிப்பு, செயல், நடனம் ,மக்களுக்காக பாடுபட்ட அவரது அயராத உழைப்பு, என்றுமே நினைவை விட்டு நீங்காது. இவருடைய உடலுக்கு மட்டும் தான் இறப்பு ..இவருடைய திறமைக்கு என்றுமே இறப்பு கிடையாது..!