தமிழ்நாட்டில்.. இன்று 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.. நாளை 5.. வானிலை மையம் தகவல்

Manjula Devi
Jan 18, 2025,08:06 PM IST

சென்னை: வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களிலும், நாளை 5 மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


தமிழ்நாட்டில்  வடகிழக்கு பருவமழை நிறைவடைந்து  பனிக்காலம் துவங்குவது வழக்கம். அதன்படியே பனிக்காலம் தொடங்கி ஜனவரி முதல் பனி பொழிவு அதிகமாக இருந்து வந்தது.இந்த பருவத்தில் பனிப்பொழிவு மட்டும் இருக்குமே தவிர மழைக்கு வாய்ப்பு இருக்காது. அதே சமயத்தில் எந்த அளவு பனிப்பொழிவு அதிகரிக்கிறதோ, அடுத்து வரும் வெயில் காலங்களில் வெயிலின் தாக்கமும் அதிகரிக்கும் என கூறுவது உண்டு. ஆனால் தற்போது உள்ள காலநிலை மாற்றத்தால் காலையில்  அதிகபடியான பனியுடன் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. குளுமையான காற்றும் வீசி வருகிறது. 




இதற்கிடையே   தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழெடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 12ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் தமிழகப்  கடலோரப் பகுதிகளின் ஒரு சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது.


இந்த நிலையில்  தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், நாளை 5 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இன்று கனமழை:


அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளை கனமழை: 


கன்னியாகுமரி, ராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி தென்காசி ஆகிய ஐந்து மாவட்டங்களில் நாளை ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


சென்னை மழை: 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்