3 மாவட்டங்களில் இன்று அதிகன மழைக்கான ரெட் அலர்ட்.. நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மூன்று மாவட்டங்களில் அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், நாளை தென் மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவி வருகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக படிப்படியாக வலுவிழக்கக்கூடும். இதனால் தென் தமிழக கடலோர பகுதிகளில் பரவலாக டிசம்பர் 14ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று அதி கன மழை (ரெட் அலர்ட்):
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது 21 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யக்கூடும் என்பதால் மூன்று மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்):
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் , ராமநாதபுரம், மதுரை, தேனி, கன்னியாகுமரி, ஆகிய 17 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று கனமழை:
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கனமழை:
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை,விருதுநகர், தேனி, மதுரை, ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 16ஆம் தேதி கன மழை:
கடலூர்,மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ஆகிய 6 மாவட்டங்களில் டிசம்பர் 16ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 17ஆம் தேதி மிக கனமழை:
கடலூர், மயிலாடுதுறை, நாகை, ஆகிய மூன்று மாவட்டங்களில் டிசம்பர் 17ஆம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 17ஆம் தேதி கனமழை:
செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், ஆகிய ஏழு மாவட்டங்களில் டிசம்பர் 17ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கணிப்பு
தற்போது நன்கு அமைந்த காற்றழுத்த தாழ் பகுதி மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வருகிறது. இது மெதுவாக அடுத்த 12 மணி நேரத்தில் குமரிக்கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தாழ்வு பகுதியாக வலுவிழந்தாலும் கூட ஈரப்பதம் மிகுந்த வடகிழக்கு காற்று குவிதல் தமிழகத்தில் மூடதிருப்பது காரணமாக தமிழகத்தில் இன்று காலை முதலே மழை தீவிரமடைவதை காண முடிகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது நாளை பகல் 10 மணி வரை தமிழகத்தில் பருவ மழை தீவிரமடைந்து மழை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடகடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை நாகை திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக அநேக இடங்களில் விட்டுவிட்டு கனமழையில் எதிர்பார்க்கலாம். குமரிக்கடல் நோக்கி காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்வதால் தென் கடலோரப் பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம். அதேபோல் உள் மாவட்டங்களிலும் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி, சிவகங்கை, உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிதமான மழையும் அவ்வப்போது கனமழையும் எதிர்பார்க்கலாம்.
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தாலும் காற்று குவிதல் நாளை காலை வரை சாதகமாக இருப்பதால் சென்னையில் நாளை காலை வரை மழை பெய்து பின்னர் படிப்படியாக மழை விலகத் தொடங்கும். மாவட்டங்களை பொறுத்தவரை நாளை இரவு வரைக்கும் கனமழை பெய்யக்கூடும். மாவட்டங்களைப் பொறுத்தவரை டிசம்பர் 14ஆம் தேதி காலை வரை மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம் என
டெல்டா வெதர்மன் ஹேமச்சந்தர் பதிவிட்டுள்ளார்.
அதேபோல் சென்னையில் இன்று மாலை வரை பரவலாக கனமழை தொடரும். அதன் பிறகு மழை முற்றிலுமாக விலகும். மாலைக்குள் கடையை மூடி விடலாம் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்