Rain Alert: வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு.. டிச. 11, 12ல் கன மழைக்கு வாய்ப்பிருக்கு!

Manjula Devi
Dec 06, 2024,06:42 PM IST

சென்னை: வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் தமிழ்நாட்டில் டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


வங்கக்கடலில் ஏற்கனவே உருவான ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அதீத கனமழை வெளுத்து வாங்கியது.இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், முக்கிய சாலைகள்,விவசாய நிலங்கள், நெசவுத்தொழில் என கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தப் புயல் சேதங்களை சீர்படுத்த முடியாமல்  மக்கள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.




இருப்பினும் மழைநீர் தேங்கிய பல இடங்களில் பழைய நிலைமை மீண்டும் திரும்பி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இந்த புயல் சேதங்களை சீர்படுத்த தற்போது வரை தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே வங்கக்கடலில் நாளை மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


அதன்படி, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட கூடுதலாக 18 சதவீதம்  பெய்துள்ளது. குறிப்பாக சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட கூடுதலாக 20 சதவீதம்  பெய்துள்ளது.


வங்கக்கடலில் நாளை  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து டிசம்பர் 12ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடர்ந்து தமிழக இலங்கை கடலோரப் பகுதிகளில் கரையை கடக்க கூடும். 


இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்காலில்  இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


குறிப்பாக தமிழ்நாட்டில் டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்பதால் இரண்டு நாட்கள் தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆந்திராவிலும் டிசம்பர் 12ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்